Thursday 17 October 2013

அர்ச்சனாவின் புற்று நோய் சிகிச்சை; தற்சமய நிலவரம் (17 அக்டோபர் 2013)

வணக்கம் நண்பர்களே,

அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.

அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.

இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.

மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.

அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.

அன்புடன் வெங்கட்

வணக்கம் நண்பர்களே,

அண்மைக்காலமாக, அர்ச்சனாவின் உடல் நிலை பற்றி இங்கே எழுதவில்லையே தவிர, அவரது தந்தையாரிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தேன். நேற்று, மூன்றாவது கீமோதெரபி முடிந்து, வீடு திரும்பியிருக்கிறார்கள். அடுத்த சிகிச்சை நவம்பர் நாலாம் தேதி. மெடிகல் ரிப்போர்ட் மற்றும் செலவுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளார்கள். அவை உங்கள் பார்வைக்கு.

Archana's prescription (16 Oct 2013)


Medical report page 2


Medical report 16 Oct 2013


Expense vouchers( Clinic bill)


Misc expenses like transport, food etc

Pharmacy bill  

என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தாராளமாக நிதியுதவி அளித்தமைக்கு மிகவும் நன்றி. அர்ச்சனாவின் குடும்பத்தினர், தங்களது நன்றியை தெரிவிக்கச் சொன்னார்கள். இப்போதைக்கு ஆறு கீமோதெரபிக்கான தொகை சேர்ந்துவிட்டது. அதற்குப்பிறகு என்ன சிகிச்சை என்று இன்னமும் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும், அர்ச்சனா உடல் நலம் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்தியுங்கள். இருபத்தாறு வயதில், மூணு மாதக் குழந்தையுள்ள இளம் தாய்க்கு புற்று நோய் என்பது மிகக் கொடூரமானது.

மேற்படி தகவல்கள் கிடைத்தால், இங்கே பதிவிடுகிறேன்.

அன்புடன்
வெங்கட்
17 அக்டோபர் 2013


Monday 14 October 2013

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே (எடுத்த)
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டினேனுக்கு அருளினள் காளி; (விடுத்த)
தடுத்து  நிற்பது  தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து  மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணும் ஆருயிரும் என நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில் லாவோ?
விண்ணு ளோர் பணிந் தேவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்களென்பார்க்கே.


ஒன்பது இரவுகள், பத்து பதிவுகள்.

இந்த விஜயதசமி நாள் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

என்னவொரு பாட்டு, தன்னம்பிக்கையை தட்டியெழுப்பும் பாட்டு. தடுத்து நிற்பது தெய்வதமேனும் அதைக் காளி படுத்து மாய்ப்பளென்று மார் தட்டுகிறார்.

இந்தப்பாடல் ஜெயஸ்ரீ பாடவில்லை (அப்பாடா, அவர் பெயரை ஒரு தடவையாவது எழுதியாயிற்று). பாடியவர் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். சரியாக கண்டுபிடிப்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.




அன்புடன் வெங்கட்
14 அக்டோபர் 2013

Sunday 13 October 2013

சரஸ்வதி பூஜை; நவராத்ரி நிறைவு நாள் (ஒன்பதாம் நாள்). பாரதி பாடல்கள், ஜெயஸ்ரீ குரலில்


பதிவுலக, முக நூல் நண்பர்களுக்கு வணக்கம். இன்று சரஸ்வதி பூஜை. ஒன்பது நாட்களாக, பாரதியின் பாடல்களை, பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுப்பதில் சிரமமொன்றுமிருக்கவில்லை. நீங்களும் ஊகித்திருப்பீர்கள்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர்  உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின்  உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மே வடி வாகிடப் பெற்றாள்.                                               (வெள்ளைத்)

இந்தப் பாடல் மிக நீளமானது. ஜெயஸ்ரீ முதலிரண்டு சரணங்கள் தான் பாடியிருக்கிறார். அதனால், நீளம் கருதி நானும் மற்ற சரணங்களை விட்டுவிட்டேன்.

சரஸ்வதி வாழுமிடங்களாக பலவற்றைக் குறிப்பிடுகிறார். வெள்ளைத்தாமரை, வீணையின் ஒலி, பாவலரின் நெஞ்சம், வேதத்தின் உட்பொருள், கள்ளமற்ற முனிவரின் கருணை வாசகம் என்று அவரது கற்பனை விரிகிறது.

ஒன்று கவனித்தீர்களா! கலைமகள், சங்கீதத்தில் இருப்பாள் என்று சொல்லவில்லை. மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் என்கிறார், குறிப்பாகப் பாடுகிறார். அந்த மாதர் வேறு யாருமில்லை. நம் ஜெயஸ்ரீதான்.



ஒன்பது நாளும், பொறுமையாக என் பதிவுகளைப் படித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி. கர்னாடக சங்கீதத்தை எளிமையான முறையில் அறிமுகம் செய்யச்சொன்ன நண்பருக்கு ப்ரத்யேக நன்றி. பள்ளி நாட்களில் ரசித்த பாரதியின் பாடல்களை மீண்டுமொரு முறை படிக்கவும், தட்டச்சவும், இந்த சாக்கில் ஜெயஸ்ரீயின் பாட்டை மீண்டும் பல தடவை கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது.

மறக்க முடியாத நவராத்ரி. எனக்கே எப்போதாவது இந்தப் பாட்டைக் கேட்கவேண்டுமானால், எளிதாக ஒரே இடத்தில் கேட்டுவிடலாம்.

விடை பெறுவதற்குமுன்,

நாளை விஜயதசமி, அதற்கு பொருத்தமான ஒரு பாடலோடு இந்த தொடரை முடிக்கலாமென்று எண்ணம். அந்த பாட்டின் வரிகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்
13 அக்டோபர் 2013

Thursday 10 October 2013

நவராத்ரி பதிவுகள்; எட்டாம் நாள்; பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

வணக்கம் நண்பர்களே,

நவராத்ரியில் பாரதியின் பாடல்கள், பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொடர்கிறது. இன்று கண்ணன் பாட்டு. கோபி, கண்ணனைக்கண்டு வர தோழியைத் தூது விடுகிறாள். கண்ணன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துவரச் சொல்கிறாள். இந்தப் பாடலில் ச்ருங்கார ரசத்துடன், ரௌத்ர ரசமும் இருக்கிறது.

பாடலின் ஆரம்பத்தில், கண்ணனின் எண்ணம்தான் என்னவென்று தெரிந்து கொண்டுவிட்டால், தோழிக்கு எது வேண்டுமானாலும் செய்வேனென்று சொல்கிறாள். ஆனால், சிறிது நேரத்தில், கோபம் வந்து, கண்ணன் ஆற்றங்கரையில் தனியிடத்தில் பேசியதையெல்லாம், தூற்றி முரசு சாற்றுவேனென்று சொல்லச் சொல்கிறாள். அப்பப்பா என்ன கோபம்! அடுத்த சரணத்திலும் (ஜெயஸ்ரீ இந்த சரணம் பாடவில்லை), இடைச்சிப் பெண்களிடம் காட்டுகிற சூழ்ச்சித்திறமை எல்லாம், வீர குல மாதரிடத்தில் வேண்டியதில்லையென்று சொல்லச் சொல்கிறாள்.

கோபம் தணிந்து, கடைசியில் கண்ணனையே எண்ணி மனம் மறுகிறது, அதனால் ஒரு சொல் கேட்டுவா என்று முத்தாய்ப்பு வைக்கிறாள்.

ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக படம் பிடித்துக்காட்டும் பாட்டு. முதலில் பாட்டைப் படியுங்கள்.


கண்ணன்-என் காதலன்

பாங்கியைத் தூது விடுத்தல்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்-அடி
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் (கண்ணன்)

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். (எண்ணம்)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்; (கன்னிகை)

அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் (கண்ணன்)

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவ னென்றே
சொல்லி  வருவையடி  தங்கமே தங்கம். (கண்ணன்)

சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து  மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம். (கண்ணன்)




வழக்கம் போல ஜெயஸ்ரீ அசத்துகிறார். ஆனாலும் கண்ணன் மீது கோபமாய்ச் சொல்லும் சரணங்களில் கோப ரசம் தனியாகத் தெரியவில்லை. ஏக்க பாவனைதான் தொனிக்கிறது. ஜெயஸ்ரீயின் பா4வம் அப்படி. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பொருள் பொதிந்த பாடல் வரிகளும், கவிஞனின் மன நிலையை சங்கீத்தில் கொண்டு வரும் திறன் படைத்த பாடகியும் சேர்ந்துவிட்டால், ரசிகனின் ஆனந்ததிற்கு எல்லையுண்டோ!


நாளை சரஸ்வதி பூஜை. இன்னொரு பொருத்தமான பாட்டுடன் சந்திக்கிறேன்.

அன்புடன் வெங்கட்
12 அக்டோபர் 2013



ஏழாம் நாள் பதிவு; நவராத்ரி தொடர். ஜெயஸ்ரீ பாடிய பாரதி பாடல்கள்

வணக்கம் நண்பர்களே,

இதோ ஏழாவது நாள் பதிவு. தினமும் விடாமல் பாட்டைத் தேடிப்பிடித்து, கவிதை வரிகளைத் தேடி, பதிவெழுதுவது ஒரு த்ரில்தான்.

இன்றைக்கு இன்னொரு கண்ணம்மா பாட்டு.


நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் ( நின்னை..)

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று ( நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

தன்செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்

அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டுக தீமையை ஓட்டிக( நின்னை)



பாரதியின் கையெழுத்து


ஜெயஸ்ரீ


இந்தப் பாட்டும் கேட்க மிக இனிமை. ரசியுங்கள்.

நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்
11 அக்டோபர் 2013








Tuesday 8 October 2013

ஆறாம் நாள் நவராத்ரி தொடர்; பாரதியும், பாம்பே ஜெயஸ்ரீயும்.

வணக்கம் நண்பர்களே!

இன்று நவராத்ரியின் ஆறாம் நாள். தினமும் ஒரு பாரதியின் பாடலை, பாம்பே ஜெயஸ்ரீ பாட கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதுவரை கேட்காதவர்கள், பழைய பதிவுகளைப் படிக்கவும்/பாட்டைக் கேட்கவும்.

சில தினங்கள் முன்பு, பாரதியின் தாலாட்டுப்பாடலான, சின்னஞ் சிறு கிளியே பாட்டு கேட்டோம். இன்று அதற்கு நேர்மறையாக ஒரு திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் திருப்பள்ளியெழுச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். திருவரங்கப்பெருமாளுக்கு, தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி பாடினார். ஆண்டாளின் திருப்பாவையும் துயிலெழுப்பும் பாடல்தான். மாணிக்க வாசகர், சிவபெருமானுக்கு, திருவெம்பாவை பாடினார்.

பாரதி யாருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். அவரது கோணமே வேறு. பாரத மாதாவிற்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். என்ன அழகான கற்பனை. நீங்களே படியுங்கள்.

பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி

பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
      புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
      எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
      தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
      வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 1

புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்; 
      பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்; 
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்! 
      வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்; 
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் 
      சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்; 
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை! 
      ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே! 2

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்; 
      பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்; 
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே 
      கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்; 
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி 
      சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே! 
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்! 
      நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! 3

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
      நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி இமயப்
      பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
      ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ?
      இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! 4

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? 
      மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? 
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? 
      கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே! 
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி 
      வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்; 
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! 
      ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

இப்போது பாட்டைக் கேட்போம். மொத்தம் ஐந்து சரணங்கள். ஜெயஸ்ரீ பாடினது இரண்டே இரண்டுதான்.



வழக்கம் போல, விருந்தில் பாதியில் எழுந்தது போலத்தான். ஒன்று கவனித்தீர்களா! துயிலெழுப்பும் பாடலும் எவ்வளவு ம்ருதுவாய், சன்னமாய், தூங்குபவர் திடுக்கிட்டு எழுந்து விடாத படி பாடியிருக்கிறார். என்ன இனிமையான குரல், நளினம். சட்டென்று முடிந்துவிட்டதே என்றுதான் தோணுகிறது.
பாரதி

ஜெயஸ்ரீ


என்ன நண்பர்களே, பாடல் எப்படி? பதிவு எப்படி, இரண்டு வரியில் சொல்லி விட்டுத்தான் போங்களேன்!

அன்புடன் வெங்கட்
10 அக்டோபர் 2013



Monday 7 October 2013

ஐந்தாம் நாள் நவராத்ரி (தொடரும் கண்ணம்மா பாட்டு, ஜெயஸ்ரீயின் குரலில்)

பதிவுலக நண்பர்களே,

நவராத்ரியின் ஐந்தாம் நாள். என்ன, போன நாலு நாளும் பாரதியார் பாட்டு கேட்டீர்களா? ஒன்பது நாளும் உங்களை நான் விடுவதாயில்லை. இந்த தொடருக்காக நான் நெட்டில், பாரதியின் பாடல்வரிகளைத்தேடி அலைந்தபோது, நிறைய திரைப்படங்களில், பாரதியார் பாட்டு ஆதிகாலம் தொட்டே வந்திருப்பது தெரிந்தது. என்ன இருந்தாலும், நம்ம ஜெயஸ்ரீ பாடுகிற மாதிரி வருமா. கர்னாடக வித்வான்களும், நிறைய பாரதியார் பாட்டுக்களை பாடிக் குவித்திருக்கிறார்கள்.

மரபுக்கவிதையிலேயே, அழகான வர்ணனைகளோடு, மிக எளிய தமிழில் பாடல்களைத்தந்து, பாரதி ஒரு மிகப் பெரிய இலக்கிய புரட்சி செய்திருக்கிறார். முப்பதுகளைக்கூட முழுசாக கடக்காத இந்த ‘பாட்டு ராஜா’ தொடாத பொருள்ளில்லை. தேச பக்தி, தெய்வ பக்தி, காதல் கவிதைகள், புராண பின்னணியில் பாஞ்சாலி சபதம், வசன கவிதை, இளைய பாரதம், குழந்தை பாட்டு.. எழுதிக் கொண்டே போகலாம்.

இன்றைய பாடல் கண்ணம்மா பாட்டுதான். பாரதியார், கடற்கரையோரம் (திருவல்லிக்கேணி, பாண்டிச்சேரி) உட்கார்ந்து பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறார், அவரே சொல்கிறார். “சாலப் பலபல நற் பகற் கனவில் தன்னை மறந்த லயந்தன்னில் இருந்தேன்”. அப்போது கூட கவிஞருக்கு அனிச்சையாக கவிதை வருகிறது. ”மூலைக் கடலினை யவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்”

கண்ணம்மா பின்னால் வந்து, பாரதியின் கண்களைப்பொத்த (மறைக்க), அவளது கை ஸ்பர்ஸமும், பட்டுடை வீசுகமழ் வாசமும் அவள் கண்ணம்மா என்று காட்டிக்கொடுக்க, ”வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?” என்று கேட்டு பார்தியார் அவளைப்பார்த்து (What's up??) என்ன செய்தி என்று கேட்கிறார். அந்த சுவாரஸ்யமான உரையாடலை  நீங்களே படியுங்கள்.

பின்னே வந்து நின்று கண் மறைத்தல்

நாதநாமக்கிரியை-ஆதிதாளம்

சிருங்கார ரசம்


மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினை யவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற் கனவில்
தன்னை மறந்த லயந்தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண் மறைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவிஎன்ன செய்தி சொல்என்றேன்;
நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள்.

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

இப்போது பாடலைக் கேட்போம்.




பாரதியாரின் குடும்பப் படம்

ஜெயஸ்ரீ, முதலிரண்டு சரணங்கள்தான் பாடியிருக்கிறார். முழுப்பாட்டும் அவர் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறது. கச்சேரிகளில், துக்கடா பாடுவதற்காக பாதிப்பாட்டை விட்டுவிடுகிறார்கள். குழந்தைகள், தின்பண்டம் உண்ணும்போது, அம்மா வந்து உடம்புக்கு ஆகாது என்று பாதியில் பிடுங்கிக் கொள்வது போல இருக்கிறது. பாதியாவது சாப்பிட்ட திருப்தி, முழுவதும் சாப்பிட முடியாத வருத்தம் இரண்டும் கலந்த ஒரு உணர்வு. நாமெல்லாரும் கடந்துவந்த ஒரு நிலைதான். ஜெயஸ்ரீயின் பாதிப்பாட்டை கேட்கும் போது நானும் அந்த மன நிலையில்தான் இருக்கிறேன்.


எனக்குப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளையானாலும், அழகான புகைப்படம். மந்தகாச புன்னகை, அவரது பாட்டைக்கேட்கும் போது கிடைக்கிற மன அமைதி, இந்தப் புன்னகையிலும் கிடைக்கிறது.

கை வலிக்க நான் எழுதியாகி விட்டது. இனி உங்கள் முறை. ஒரு எஸ்.எம்.எஸ் அல்லது ட்வீட் போல நறுக்கென்று நாலுவரி எழுதிவிட்டுப்போங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்



நவராத்ரி பதிவுகள், நான்காம் நாள், பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

இன்று நவராத்ரி  நான்காவது நாள். (8 அக்டோபர் 2013) பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னொரு பாரதியார் பாடல் கேட்போம்.

இந்தப் பதிவை படித்ததும், பாட்டைக்கேட்டதும், இரண்டு வரியில் பின்னூட்டமிட்டால், மாய்ந்து மாய்ந்து பதிவெழுதும் எனக்கு, நாலு பேர் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், அதனால், இந்த முயற்சி வீணில்லை என்று தோணும்.

இது பாரதியார் அவரது மனைவி செல்லம்மாளுடன். அந்த நாளில் வண்ணப்படம் ஏது என்று கேட்கக் கூடாது. கறுப்பு, வெள்ளைப் படத்தை திருத்தியிருக்கிறார்கள்.  நன்றாகத்தான் இருக்கிறது. ரசிப்போமே!




சரி பாடலை முதலில் கேளுங்கள்.



கண்ணம்மா-என் காதலி

காட்சி வியப்பு

செஞ்சுருட்டி-ஏகதாளம்

 ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத்திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது நெஞ்சிலலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது குரலினிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய்,-கண்ணம்மா! சாத்திரமேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திரமுண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோ டீ?-இது பார் கன்னத்து முத்த மொன்று!

எனது கற்பனைகள்.

புதிது புதிதாய் உவமைகள் காட்டிப் பாடுவதில் பாரதிக்கு நிகர் அவர்தான். கண்ணம்மாவின் பட்டுப்புடவை, அதில் ஜொலிக்கும் வைரம்,  நடுராத்திரியின் வானம் போல இருக்கிறதாம். அந்த வைரங்கள், நக்ஷத்திரங்களாம். இரண்டு கண்களும், சூரிய, சந்திரர்கள். கருத்த கண்கள், வானத்துக் கருமை. இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்.


இனி ஜெயஸ்ரீ!

இந்தப்பாடலிலும், சிவப்பு நிறத்தில் உள்ள சரணத்தை ஜெயஸ்ரீ பாடவில்லை. பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுருக்கமாக முடித்துவிட்டார்.

இந்த புகைப்படம் பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கார் விழாவிற்குச் சென்றபோது எடுத்தது.



வழக்கம்போல இந்தப் பாட்டிலும், இவரது தனித்துவம் தெரிகிறது. கேளுங்கள். ரசியுங்கள். நானும் அவரது பாடலைத் தினமும் பதிவேற்றுவதற்காக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒன்பது நாளுக்கும் பாட்டு கிடைக்குமா என்று கவலைப்பட்டது போய், எந்த பாடலைத் தேர்ந்தெடுப்பது என்கிற கவலை வந்துவிட்டது.

மறக்காமல், ஒரு வரி, பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்.

அன்புடன் வெங்கட்
8 அக்டோபர் 2013

நவராத்ரி, பாரதியார், பாம்பே ஜெயஸ்ரீ (3வது நாள்)

இன்று நவராத்ரி மூன்றாவது நாள். (7 அக்டோபர் 2013) பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னொரு பாரதியார் பாடல் கேட்போம்.

இந்தப் பதிவை படித்ததும், பாட்டைக்கேட்டதும், இரண்டு வரியில் பின்னூட்டமிட்டால், மாய்ந்து மாய்ந்து பதிவெழுதும் எனக்கு, நாலு பேர் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், அதனால், இந்த முயற்சி வீணில்லை என்று தோணும்.



முதல் இரண்டு நாளும், ச்ருங்கார ரசத்தில் அமைந்த பாட்டுகள் கேட்டோம். இன்று கண்ணம்மாவைக் குழந்தையாக, தாலாட்டும் பாட்டுக் கேட்கலாம்.என்னைக்  கலி தீர்த்தே  உலகில்   ஏற்றம் புரிய வந்தாய்”, பிள்ளைச் செல்வத்தின் பெருமையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். என்னுடைய பெண், சிறு பிள்ளையாக இருந்தபோது இந்தப்பாட்டைக் கேட்கும் போது, எனக்காகவே பாரதி எழுதினாற்போல் தோணும். பாடத்தெரியவில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டது அப்போதுதான்.

இன்னொரு அற்புதமான வரி,
மெச்சி யுனை யூரார்  புகழ்ந்தால்   மேனி சிலிர்க்கு தடீ!

உண்மைதானே! நம் குழந்தைகளை பிறர் பாராட்டும் போது, நமக்கு ஏற்படுகிற புளங்காகிதம். அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

சரி பாடலை முதலில் கேளுங்கள்.



கண்ணம்மா - என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே  கண்ணம்மா!        செல்வக் களஞ்சியமே!
என்னைக்  கலி தீர்த்தே  உலகில்   ஏற்றம் புரிய வந்தாய்!        1

பிள்ளைக் கனியமுதே  கண்ணம்மா        பேசும் பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே   என் முன்னே        ஆடி வருந்தேனே!        2

ஓடி வருகையில்  கண்ணம்மா    உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்   உன்னைப்போய்  ஆவி தழுவு தடீ!        3

உச்சி தனை முகந்தால்  கருவம்  ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார்  புகழ்ந்தால்   மேனி சிலிர்க்கு தடீ!        4

கன்னத்தில் முத்தமிட்டால்  உள்ளந்தான்     கள்வெறி  கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ  கண்ணம்மா     உன்மத்தமாகு தடீ!        5

சற்றுன் முகஞ் சிவந்தால்  மனது சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்  எனக்கு  நெஞ்சம் பதைக்கு தடீ!        6

உன்கண்ணில் நீர் வழிந்தால்என்நெஞ்சில்  உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா!    என்னுயிர்  நின்ன தன்றோ?    7  
 சொல்லு மழலையிலே - கண்ணம்மா!        துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலேஎனது        மூர்க்கந் தவிர்த்திடு வாய்.        8

இன்பக் கதைக ளெல்லாம்  உன்னைப்போல்     ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலேஉனைநேர்        ஆகுமோர் தெய்வ முண்டோ?        9

மார்பில் அணிவதற்கே  உன்னைப்போல்   வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே   உன்னைப் போல்  செல்வம் பிறிது முண்டோ?        10

இனி ஜெயஸ்ரீ (புராணம்!)

இந்தப்பாடலிலும், சிவப்பு நிறத்தில் உள்ள சரணங்களை ஜெயஸ்ரீ பாடவில்லை. பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

என்ன இனிமையான குரல். உங்களுக்கு சிறு குழந்தையிருந்தால், இந்தப் பாட்டைக்கேட்டவாறு தூங்கச் செய்யுங்கள். இரண்டு தடவை கேட்டால் நீங்களே தூங்கிவிடுவீர்கள். கடைசியில் கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று ஜெயஸ்ரீ முடிக்கும் போது, நீங்கள் மறுபேச்சு பேசாமல், ஒத்துக்கொள்வீர்கள் என்பது நிச்சயம்.






அன்புடன் வெங்கட்
7 அக்டோபர் 2013