Saturday 31 August 2013

ஆண்டாள், நாச்சியார் திருமொழி, ஸ்ரீவைணவம்

பரதக்கலை என்பது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், டாக்டர். ஜாகீர் உசேன். நாட்டியம் மற்றுமின்றி, ஸ்ரீவைணவத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஆண்டாளின் நாச்சியார் திருமொழியிலே லயித்து, அதைப்பற்றி எளிய தமிழில் சொற்பொழிவாற்றுகிறார். தனது, நாட்டியங்களிலே, அபிநயித்து, அந்த மையலை நம் கண் முன்னால் கொண்டு வருகிறார்.

பிரபல நாட்டியக்கலைஞரான திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனம் பயின்ற இவர், வைணவ ஆகமங்களிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். இந்திய அரசு, ஸ்ரீவைணவ ஆகமங்களில், ஆராய்ச்சி செய்ய ’ஸீனியர் பெஃல்லோஷிப்’ வழங்கியிருக்கிறது.

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்த இவர், பாஞ்சாலி சபதம் மற்றும் சீதாயணம் என்ற நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இவரைப் பற்றிய தகவல்களை அறிய, இந்த தளத்தைப் பார்க்கவும்.

அவரது இரண்டு நடனங்கள் உங்கள் பார்வைக்கு. இரண்டாவது காணொளி, ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ‘அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்’.



அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!


இவரது ஆண்டாள் சொற்பொழிவு நாளை பதிவேற்றப்படும்.

அன்புடன் வெங்கட்

Thursday 29 August 2013

இன்று கண்ணன் பிறந்த நாள்



இன்று கண்ணன் பிறந்த நாள். பெரியாழ்வார் போல் கண்ணனை அனுபவித்தவர் ஒருவரும் இல்லை. பல்லாண்டு பாடின கையோடு கண்ணன் பிறப்புதான். கம்ஸனுக்கு தெரிந்து விடும் என்று பிறந்த நட்சத்திரததை மறைத்து அத்தத்தின் பத்தா நாள் என்றார். அத்தம் என்பது ஹஸ்தம். ஒருபுறமாக எண்ணினால் திருவோணம் வரும். இன்னொரு புறமாக எண்ணினால் ரோகிணி வரும். பயத்தில் ஊரைக்கூட மாற்றி திருக்கோஷ்டியூரில் பிறந்ததாக சொல்கிறார்.

கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாருங்கள் கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

மேலே நீங்கள் காணும் கண்ணன் எந்த கோவிலின் திருவுருவம் என்று தெரியுமா? ரொம்பவும் பிரபலமான கோவிலில்லை. சென்னை, மேடவாக்கம் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலின் ஒரு சன்னிதி. அற்புதமான திருவுருவம். திருமஞ்சன வீடியோ கூட இருக்கிறது. தேடிப்ப்பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்.

அன்புடன் வெங்கட்


Monday 26 August 2013

பதிவுகளில் ஒலிக்கோப்புகளை இணைப்பது எப்படி?

 நண்பர்களே, போன பதிவில், பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல் ஒன்று இணைத்திருந்தேன். சில அன்பர்கள் ஆடியோ ப்ளேயர் தெரியவில்லை என்று பின்னூட்டமிட்டிருந்தனர்.

இது இன்னொரு முயற்சி. உங்கள் உலாவியில், ப்ளேயர் தெரிகிறதா, ஒலிக்கோப்பை கேட்க முடிகிறதா என்று பின்னூட்டம் இடுங்கள்.

அன்புடன் தமிழ் நேசன்

Saturday 24 August 2013

பாம்பே ஜெயஸ்ரீயின் இசைப் ப்ரவாஹம்


நீங்கள் சாஸ்த்ரீய சங்கீதம் கற்றுக்கொண்டால்தான் கர்னாடக இசையை ரசிக்க முடியுமென்று நினைக்க வேண்டாம். பொதுவாக, சங்கீதம் கொஞ்சமாவது கற்றுக்கொண்டவர்கள்தான் கச்சேரிக்குப் போவார்கள். லயம் தவறாமல், தாளம் போட்டுக்கொண்டு, தலையை அசைத்து பாட்டை ரசிப்பார்கள்.

இப்பொதெல்லாம், கர்னாடக இசையை, முறைப்படி கற்றுக்கொள்ளாமலேயே,  எப்படி ரசிப்பது என்று சொல்லித்தர நிறைய இணைய தளங்கள் வந்து விட்டன. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு, இந்த தெய்வீக இசையைக் கேளுங்கள்.

பாம்பே ஜெயஸ்ரீ ‘லைஃப் ஆப் பை’ படத்தின் தாலாட்டுப்பாடல் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டபின், உலக ப்ரசித்தி அடைந்துவிட்டார். தவிர, இப்போதெல்லாம், தமிழ் திரைப்படங்களில், அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறார். ‘வசீகரா’, மலர்களே, நிலை வருமா, சுட்டும் விழிச்சுடரே (கஜினி) பாடல்களை நீங்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் கேட்டிருப்பீர்கள்.

எப்படியோ, பாம்பே ஜெயஸ்ரீ, நீங்கள் கர்னாடக சங்கீதம் கேட்காத ரகம் என்றாலும் உங்களுக்கு அறிமுகமானவர் என்று சொல்லவே இந்த நீண்ட முன்னுரை.

இந்த பாடல், ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்தது. ஒரு இருபத்தைந்து நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள். தொ(ல்)லைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தால், நிறுத்திவிடுவது நலம். ஒரு நல்ல இசைக்கு நாம் செய்யும் பணி அதை, ச்ரத்தையுடன் கேட்பதுதான்.

முதலில் ஆலாபனை. பின்னர், வயலினில் ஆலாபனை. அதன் பிறகு ஜெயஸ்ரீயின் பாட்டு ஆரம்பிக்கும். அந்தக்குரலின் இனிமை, நெளிவுகள், ஸ்வரங்கள் வந்து விழுகிற அற்புதம், சலசலக்கும் ஓடையாகத்தொடங்கும் பாட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்துப் புதுக்காவிரி மாதிரி ப்ரவஹிக்கும். ஒரு முறை கேளுங்கள்.. பிறகு, கேட்டுக்கொண்டேயிருப்பீர்கள்.

ஒரு சின்ன செய்தி சொல்லட்டுமா! போன டிஸம்பரில், சங்கீத சீசனில், சென்னை ம்யூஸிக் அகாதமியில் ஜெயஸ்ரீ பாடின அன்று (29 ம் தேதி), சங்கரா ஹாலில் இந்த ஒலித்தட்டை (மார்கம்) வாங்கினேன். அன்றிலிருந்து, இன்று வரை தினம் ஒரு தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் இந்தப்  பாட்டைக்கேட்கும் போது, புதுப்புது அனுபவங்கள் தோன்றுகிறது. அது பற்றி பிறகு பேசுவோம்.

தெய்வீக இசை.. வாருங்கள் அனுபவித்து மகிழ்வோம்.


கர்னாடக சங்கீதம்

வெகு நாட்களாக, வலைப்பதிவில் எப்படி இசையை இணைப்பது என்ற குழப்பம் இருந்தது. இதோ கண்டுபிடித்துவிட்டேன்.

இன்னிசை மழையில் நனைய தயாராயிருங்கள்.

Wednesday 7 August 2013

எழில் கொஞ்சும் மலை நாடு (பாகம் 3)

போன இரண்டு பகுதிகளில், ஆலப்புழாவின் படகு வீட்டையும், ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமங்களையும் பார்த்தோம். இப்போது, அருவிகளின் அழகைப் பார்ப்போம்.

சாலக்குடி அருவி என்றதும் நம் எல்லோருக்குமே முதலில் நினைவுக்கு வருவது, கே. பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் தான். படம் தொடங்குவதே அருவியின் ஆர்ப்பரிக்கும் ஓசையுடன் தான். கமலும், ரேகாவும் திரையில் அறிமுகமாகும் கணங்கள். அவர்களது பின்னணி, அருவிக்கு வந்ததன் நோக்கம் நமக்குத் தெரியும்போது நெஞ்சு பதைபதைக்கும்.

ஹோவென்ற இரைச்சலோடு கண்ணில் விரியும் சாலக்குடி அருவியை காண வேண்டுமென்பது நெடு நாள் ஆசை. முன்பொரு தரம், நண்பனின் திருமணத்திற்காக சாலக்குடி போனோம், ஆனால் நல்ல மழை. கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாகப் பயணித்தோம். பாலக்காட்டில் ஆரம்பித்த மழை, குருவாயூர், சாலக்குடி வரை விடவேயில்லை. திருமணம் முழுக்க முழுக்க மழையில்தான் நடந்தது. மழையில், அருவிப்பக்கம் போவது பாதுகாப்பானதில்லையென்று நண்பனும், அவர் குடும்பத்தார்களும் சொன்னதால், அந்த முறை அருவியைப்பார்க்கிற வாய்ப்பு தட்டிப்போயிற்று. இது நடந்தது 1991ல்.

பிறகு, இந்தியாவை விட்டு, திரைகடலோடியும் திரவியம் தேட மத்திய தரைக்கடல் நாடுகளில் வசிக்க ஆரம்பித்ததும், கேரளா பக்கம் போக வாய்ப்பு அமையவில்லை.

பின்னாளில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கும், ஸ்விட்ஸர்லாந்தின் ரைன் நீர்வீழ்ச்சிக்கும் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் சென்றபோதும், சாலக்குடி அருவிக்கும் போக வேண்டுமென்ற எண்ணம் மாறவில்லை.

போன டிஸம்பரில், கொச்சியில் போய் இறங்கினதும், முதலில் கிளம்பினது சாலக்குடிக்குத்தான்.

ஆனால், புன்னகை மன்னன் படத்தில் பார்த்த அழகும், ஆர்ப்பரிப்பும் நேரில் கண்டபோது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை, மழைக்காலம் முடிந்த உடனே போயிருந்தால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகம் இருந்திருக்கலாம்.

இன்னொரு ஏமாற்றம். தண்ணீர் அருகே போகமுடியாத குறை. நயாகரா நீர்வீழ்ச்சியில் படகிலும், நடந்தும் தண்ணீருக்கு மிக அருகே போய் ஆசை தீர நனைத்துக்கொள்ளலாம். நீர்த்திவலைகள் முகத்தில் தெறிக்க, ராட்சச இரைச்சலில், பயந்தபடி கொட்டும் அருவியின் போகிற இன்பமே அலாதி. அது சாலக்குடி மற்றும் அதிரம்பள்ளி அருவிகளில் கிடைக்கவில்லை.

மற்றபடி, பச்சைப்பசேலென்ற வனாந்தரப் பிரதேசமும், சலசலக்கும் நீர்வீழ்ச்சியும், அமைதியான பின்னணியும் காணத்தகுந்தவையே. இதோ படங்களும், காணொளியும் உங்களுக்காக.





காணொளி







கீழே உள்ள காணொளி வழச்சல் அருவி
கொச்சியிலிருந்து மூணார் போகிற வழியில் உள்ளது

என்ன நண்பர்களே, இந்தப் பதிவை ரசித்தீர்களா? உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நான் பதிவுலகத்திற்கு புதியவன். அதனால் உங்கள் எண்ணங்களும் ஆதரவும் அவசியம்.

சுற்றுலா போக எது நல்ல காலம், எவ்வளவு செலவாகும் போன்ற விபரங்களை சில அன்பர்கள் கேட்டுள்ளார்கள். இந்த தொடரின் முடிவில் இது பற்றின விபரங்கள் தரப்படும்.

அன்புடன் வெங்கட்



ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்


வலைப்பதிவு நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்

அன்புடன் வெங்கட்

Saturday 3 August 2013

எழில் கொஞ்சும் மலை நாடு (கேரளா) பாகம் இரண்டு


முதல் பாகம் படிக்காதவர்கள், இங்கே சென்று வீடியோக்களைப் பார்த்துவிட்டு வரவும். இந்த பதிவில் ஆலப்புழா புகைப்படங்கள்.

நீல நிற தண்ணீர், நீல நிற வானம், நடுவில் பசுமை


படகு வீட்டின் முழுத்தோற்றம்


போகிற வழியில் ஒரு சர்ச்


கைவிசைப் படகில் கிராமத்து மக்களின் சவாரி


பூத்துக்குலுங்கும் தென்னை மரங்களின் அழகு



ஆற்றங்கரையில் குரு ( நவக்ரஹ) கோயில்


இயற்கையின் அழகு



எழில் கொஞ்சும் கிராமம் (கண்ணுக்கெட்டின வரை தண்ணீர்)


பதிவரின் படம் (விளம்பரமல்ல)


இன்னொரு கோணம் (அலுக்கவே அலுக்காது)


தூரத்தில் மிதக்கும் மற்ற படகு வீடுகள்



என்ன நண்பர்களே! ஆலப்புழாவின் படகு சவாரியின் அழகை ரசித்தீர்களா? அடுத்த பதிவில் மற்ற ஊர்களைப் பார்ப்போம்.

அன்புடன்

தமிழ் நேசன் (வெங்கட்)