Saturday 24 August 2013

பாம்பே ஜெயஸ்ரீயின் இசைப் ப்ரவாஹம்


நீங்கள் சாஸ்த்ரீய சங்கீதம் கற்றுக்கொண்டால்தான் கர்னாடக இசையை ரசிக்க முடியுமென்று நினைக்க வேண்டாம். பொதுவாக, சங்கீதம் கொஞ்சமாவது கற்றுக்கொண்டவர்கள்தான் கச்சேரிக்குப் போவார்கள். லயம் தவறாமல், தாளம் போட்டுக்கொண்டு, தலையை அசைத்து பாட்டை ரசிப்பார்கள்.

இப்பொதெல்லாம், கர்னாடக இசையை, முறைப்படி கற்றுக்கொள்ளாமலேயே,  எப்படி ரசிப்பது என்று சொல்லித்தர நிறைய இணைய தளங்கள் வந்து விட்டன. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு, இந்த தெய்வீக இசையைக் கேளுங்கள்.

பாம்பே ஜெயஸ்ரீ ‘லைஃப் ஆப் பை’ படத்தின் தாலாட்டுப்பாடல் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டபின், உலக ப்ரசித்தி அடைந்துவிட்டார். தவிர, இப்போதெல்லாம், தமிழ் திரைப்படங்களில், அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறார். ‘வசீகரா’, மலர்களே, நிலை வருமா, சுட்டும் விழிச்சுடரே (கஜினி) பாடல்களை நீங்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் கேட்டிருப்பீர்கள்.

எப்படியோ, பாம்பே ஜெயஸ்ரீ, நீங்கள் கர்னாடக சங்கீதம் கேட்காத ரகம் என்றாலும் உங்களுக்கு அறிமுகமானவர் என்று சொல்லவே இந்த நீண்ட முன்னுரை.

இந்த பாடல், ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்தது. ஒரு இருபத்தைந்து நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள். தொ(ல்)லைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தால், நிறுத்திவிடுவது நலம். ஒரு நல்ல இசைக்கு நாம் செய்யும் பணி அதை, ச்ரத்தையுடன் கேட்பதுதான்.

முதலில் ஆலாபனை. பின்னர், வயலினில் ஆலாபனை. அதன் பிறகு ஜெயஸ்ரீயின் பாட்டு ஆரம்பிக்கும். அந்தக்குரலின் இனிமை, நெளிவுகள், ஸ்வரங்கள் வந்து விழுகிற அற்புதம், சலசலக்கும் ஓடையாகத்தொடங்கும் பாட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்துப் புதுக்காவிரி மாதிரி ப்ரவஹிக்கும். ஒரு முறை கேளுங்கள்.. பிறகு, கேட்டுக்கொண்டேயிருப்பீர்கள்.

ஒரு சின்ன செய்தி சொல்லட்டுமா! போன டிஸம்பரில், சங்கீத சீசனில், சென்னை ம்யூஸிக் அகாதமியில் ஜெயஸ்ரீ பாடின அன்று (29 ம் தேதி), சங்கரா ஹாலில் இந்த ஒலித்தட்டை (மார்கம்) வாங்கினேன். அன்றிலிருந்து, இன்று வரை தினம் ஒரு தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் இந்தப்  பாட்டைக்கேட்கும் போது, புதுப்புது அனுபவங்கள் தோன்றுகிறது. அது பற்றி பிறகு பேசுவோம்.

தெய்வீக இசை.. வாருங்கள் அனுபவித்து மகிழ்வோம்.


4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இசையின் தொடுப்பைக் காணவில்லையே!

ஸ்ரீதர் said...

அருமை ! ! !

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

ஸ்ரீதர்

Venkat said...

பதிவின் முடிவில், சிறியதாய் ஒரு ஆடியோ ப்ளேயர் இருக்கிறது பாருங்கள். அதில் அம்புக்குறி பொத்தானை அழுத்துங்கள். (Click the arrow button in the Audio player)

Packirisamy N said...

Beautiful. Thanks.