Friday 28 June 2013

பேச்சலரின் கிச்சன் அனுபவங்கள்



மணி நேரம் கால் கடுக்க நின்று
’பத்துப் பாத்திரம்’
தேய்த்.....த்த பின்,
களைத்துப்போய்
காபி குடித்ததும்
ஸிங்க்கில் திரும்பவும்
’அஞ்சு’ பாத்திரம்!!

பாதிக்குப் பாதி??

Friday 14 June 2013

எனது முதல் பிரசுரமான சிறுகதை (கதைத் தலைப்பு: “பிரசுரமாகாத கதை” )

ஜூன் 1988

இன்றைக்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு புதிய தமிழ் எழுத்தாளர் அறிமுகமானார். முதல் சிறுகதையே, பிரபல வார இதழான ஆனந்த விகடனில் பிரசுரமானது. அந்த சிறுகதை இதோ உங்களுக்காக கீழே.

தமிழ் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் இந்த சிறுகதையை ரசித்துப் பாராட்டினார். விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களும் பாராட்டினார்.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அந்த அறிமுக எழுத்தாளர் நான் தான்.

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அன்புடன் 

தமிழ் நேசன் (ஸாரி வெங்கட்)



Thursday 6 June 2013

வியர்த்தம் தமிழ் சிறுகதை (1988ல் எழுதியது)

வியர்த்தம்
தமிழ் சிறுகதை (1988ல் எழுதியது)

”என்னங்க, இரண்டு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க, மாஞ்சு மாஞ்சு எட்டு மணி நேரம் எழுதுவேளே அதையும் காணோம், வாசத் திண்டுல சாஞ்சுண்டு தெரு விளக்கு வெளிச்சத்திலே நேரம் போறது தெரியாம படிப்பேளே அதையும் காணோம், பாவயாமியும், பஞ்ச ரத்ன மாலாவும் இரண்டு நாளா காதிலே படவே இல்லே, உடம்பு ஏதாவது சரியில்லையா” என்ற பெண்மைக்கே உரிய கவலைகளோடு, முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியங்களில், விடையைப்பற்றிக் கவலைப்படாமல் கேட்ட பார்வதி, எங்கே தேசிகன் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், அவரது மார்க்கூட்டில் கை வைத்தும் பார்த்தாள்.
ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் பார்வதியின் கேள்விகளைக் கவனியாத தேசிகன், ஸ்பர்ஸம் பட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தார். கண்களை மலர்த்தி, பார்வதியைப் பார்த்துப் புன்னகைத்தார். அதற்கு அர்த்தம், “எனக்கு ஒன்றுமில்லை. நீ அனாவசியமாக கவலைப்படாதே”
தேசிகன் ஒரு முழு நேர எழுத்தாளர். சமுதாய அவலங்களைக் கண்டு, நெஞ்சு கொதித்து, தனது தவிப்புகளை எப்படி வெளிப்படுத்துவது என்ற ஒரு கனல் அவருக்குள் தகித்தது. அது கும்பகோணத்து போர்டு ஸ்கூல் நாட்களிலும், சென்னைக்கு வந்து உத்யோகம் பார்த்த நாட்களிலும் நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட உணர்ச்சி வசப்படுகிற வேகமும், தன்னைச் சுற்றி நடக்கிற அநியாயங்களைத் தட்டிக்கேட்கிற தைரியமும் அவரைக் கும்பலிலிருந்து தள்ளி வைத்தன. அவருக்குள் கழன்ற அக்கினிக்குஞ்சு, தீக்கக்குகிற கவிதைகளாய், கதைகளாய் மலர்ந்தன. புதுமைக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டல்லவா! அதனால் சீக்கிரத்தில் தேசிகன் பிரபலமானார். அவர் எழுத்தைப் படித்தவர்கள் ‘மாயாகாவோஸ்கி’ மாதிரி எழுதுகிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். மாயாகாவோஸ்கி யாரென்பதையே அதற்குப் பிறகுதான் தேசிகன் தெரிந்துகொண்டார்.
என்னங்க யோசனை, தலையை வலிக்கிறதா, சுக்கு பத்து போட்டு விடட்டா?
தேசிகன் சிரித்துக்கொண்டார். இனிமேலும் மௌனமாக இருந்தால் தனக்கு என்னவோ ஏதோ என்று ஊரைக்கூட்டினாலும் கூட்டிவிடுவாள் என்று நினைத்த தேசிகன், “ஒண்ணுமில்லே பார்வதி, உடம்பெல்லாம் சௌக்யம்தான். மனசுதான் கொஞ்சம் சரியில்ல” என்றார்.
அந்த போக்கத்த சுப்புவ நினைச்சுண்டு மருகறேளா! நம்மகிட்ட கோவிச்சுண்டு எத்தனை நாள் இந்த பக்கம் வராம போயிடுவான். அவன் கோபத்தையெல்லாம் ஜலத்தில எழுதி வையுங்கோ. நாலு நாள்ல ‘ மன்னி, இன்னிக்கு என்ன சமையல்னு’ வருவான் பாருங்கோ.
சுப்பு தேசிகனுடைய ஆப்த ஸ்னேகிதன். அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார். சுப்புவும் சமுதாய அவலங்களைப் பற்றி மனதில் தைக்கிற மாதிரி எழுதுவான். தேசிகன் உற்சாகம் கொடுத்து எழுத வைப்பார். ‘பேசாம வேலைய விட்டுட்டு முழு மூச்சா எழுத்துல இறங்கலாம்னு பாக்கிறேன் அண்ணா’ என்று சுப்பு சொன்ன போது, “ நான் பண்ண தப்பை நீயும் பண்ணிடாதே சுப்பு” என்று தனது அனுபவத்தைச் சொன்னார். ஏதோ மேலதிகாரி கதை எழுதுற கவனம் கொஞ்சம் கணக்கு எழுதறதுலேயும் இருக்கட்டும் என்று சொன்னதும், ஒரு கோபத்தில் ‘சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்று வேலையை உதறி விட்டு வந்தவர் தேசிகன். எழுத்து வழிச் சம்பாத்யமும், கிராமத்திலிருந்து வருகிற குத்தகை நெல்லும் இழுத்துக்கட்டி செலவைச் சமாளிக்க உதவினாலும், கஷ்டப்பட்டார். சுப்புவும், தான் செய்த தவறைச் செய்யவேண்டாமென்று நினைத்தார்.
சுப்புவோடு இரண்டு நாட்களுக்கு முன் சின்ன மனத்தாங்கல். ஒரு நாலாந்தரப் பத்திரிக்கையில், முகம் சுளிக்க வைக்கிற  நடையில் சுப்பு ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்திருந்தான். வீட்டிற்கு வந்த சுப்புவை கோபத்தில் ஒரு பிடிபிடித்து விட்டார். சுப்புவும் சளைக்காமல், ”படிக்கிறவா சந்தோஷத்திற்காக எழுதறோம். அவங்களோட சொந்த கஷ்டங்களை மறந்து கொஞ்ச நேரமாவது கதையில லயிச்சு ரஸிக்கட்டுமே இதிலென்ன தப்பு” என்று பதில் பேசினதோடு நில்லாமல், “எத்தனை ப்ரபலமான எழுத்தாளர்கள் இந்தப் பத்திரிக்கையில் எழுதல்ல. ஒரு பேர் வர வேண்டாம், நாலு பேருக்கு அறிமுகம் ஆக வேண்டாம். இலக்கியப்பணி, இலக்கியப்பணின்னு வீட்டில உட்கார்ந்து பேப்பர்ல உழுதா ஆயிடுத்தா.. நாம எழுதறத படிக்க நாலு வாசகன் வேணும் ஸார்.. வாசகன் வேணும்.”
இது தேசிகன் எதிர்பாராத பதிலடி. ஏண்டா, நீயா இந்த மாதிரி பேசற.. எழுத்துக்கு வாசகனைத் தேடி அலையறதில்ல இலக்கியம். தரம் இருந்தா தானே தெரியும்னு நீயே எத்தனை தடவை சொல்லியிருப்பே.
படிக்கிறவா சந்தோஷத்திற்கு எழுதறது தப்புங்கிறேளா?
குழந்தைக்கு மருந்து பிடிக்குமோ! அது ஜுரத்தில உளறும் போது கூட ஐஸ்கிரீம் வேணும்னு அடம் பிடிக்கும். அதுக்காக அதோட அம்மா வாங்கிக்கொடுத்துடுவாளோ. சொல்லு. குழந்தைக்கு எது நல்லதுன்னு தெரிஞ்ச அம்மா என்ன பண்ணுவா, நைச்சியாம பேசி, சமாதானம் பண்ணி மருந்தக் கொடுப்பாளில்லையா. அது மாதிரி, நாம்பளும் பொறுப்பா நடந்துக்கணும். நம்மோட பேச்சு, எழுத்து எல்லாம் ஸொஸைட்டிய நல்ல வழில கொண்டு போறதா இருக்கணும். புரிஞ்சுதா.
சமுதாயத்த திருத்த நான் யார்? அதுக்கெல்லாம் எம்.எல்.ஏ, எம்.பின்னு ஊர் பூரா ஆள் இருக்காளே.. இந்த பேனா துப்பாக்கிய விட வலியதுன்னு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். ஒரு எழுத்தாளன்கிறது நாட்டு நடப்பை ப்ரதி பலிக்கிற வெறும் கண்ணாடி. அவ்வளவுதான்.
தேசிகனுக்கு கோபம் தலைக்கேறி விட்டது. சுப்பு, ஒரு ……யா வந்து இது என்னோட தொழில். காசு வர்றது. ஊரைத் திருத்த நான் யார்னு கேக்கிற மாதிரி இருக்கு நீ பேசறது. ஒரு வேசிக்கும், எழுத்தாளனுக்கும் ஒண்ணும் வித்யாசமில்லேன்னு சொல்றியா.
சுப்புவுக்கு மூஞ்சி சிறுத்துவிட்டது. உங்களுக்கு என் மேல பொறாமை. எங்கே நான் சீக்கிரத்தில உங்களைவிட ப்ரபலமாயிடுவேனோன்னு பயம். நிலைப்படியில் திகைத்து நின்ற பார்வதியைக்கூட லட்சியம் பண்ணாமல் விருட்டென்று படியிறங்கிப் போய்விட்டான்.
இப்படி கண்ணச் செருகிண்டு படுத்துண்டு இருந்தா, யோஜனையா இல்லே, பேசக்கூட முடியலையான்னு தெரிய மாட்டேன்கிறது. எழுதறவா வாய் விட்டு பொண்ட்டாட்டிகிட்ட பேசக்கூடாதுன்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன.
சொல்லிவைத்த மாதிரி பேச்சு நின்று விம்மலுடன் அழுகை. காலங்காலமாய் பெண்மை உபயோகிக்கும் ஆயுதம்.
அடாடா.. எதையாவது நெனச்சுண்டு முணுக்னா அழ வேண்டியது.
முழந்தாள்களுக்குள் முகம் புதைத்து குலுங்கின அவள் தோள்களைப் பற்றி, ஒரு கையால் முகவாயைப் பற்றி முகத்தை உயர்த்தினார். சின்ன முறுவல். இது என்ன அர்த்தமில்லாமல் ஒரு அழுகை என்கிற தொனியில்.
பார்வதி குளமான கண்களோடு, பளீரெனச் சிரித்தாள். இதெல்லாம் பெண்களுக்கு எப்படி லாவகமாக கைவருகிறதென்று திகைத்த தேசிகன், ஏறக்குறைய அவளைத் தூக்கிக்கொண்டு போய் தன்னருகே திண்ணையில் அமர்த்திக்கொண்டார். மணி பத்திருக்கலாம். ஊர் தூங்கிப்போய் நிசப்தமாக இருந்தது. வானத்தில் சுக்ல பட்சத்து நிலா சோகையாய் இவர்களைப் பார்த்து வெறித்தான்.
சொல்லுங்க. என்னாச்சு உங்களுக்கு. நாலு நாள் முன்னால எங்கேயோ கூட்டத்திற்கு போயிட்டு வந்தீங்க. அதிலேர்ந்து சுரத்தே இல்லையே. என்ன விஷயம் என்று காதருகே கிசுகிசுத்த படி, அங்கங்கே வெள்ளி முடி பரவத்தொடங்கிய தேசிகனின் தலையைக்கலைத்தாள். அப்பாடி, சமாதானமாகி விட்டாள்.
பார்வதி, நான் இனிமே எழுதவே போறதில்ல.. மாஞ்சு மாஞ்சு எழுதறதுல்லாம் வியர்த்தம். வெட்டி வேலை.
கழுத்தைச் சுற்றியிருந்த கைகளை சரேலென்று விலக்கி நகர்ந்த பார்வதி புருவங்கள் முடிச்சிட, என்ன ஆச்சு உங்களுக்கு.. ஏன் இந்த விரக்தி திடீர்னு.
ஒரு எழுத்தாளன் தன்னோட எழுத்தால சமுதாயத்த உயர்த்தணும், தான் எழுதற மாதிரி தானும் வாழ்ந்து காட்டணும்னு சொல்வேனே, ஞாபகமிருக்கா பார்வதி.
பார்வதி பேசவில்லை. தேசிகன் பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார்.
இலக்கிய சிந்தனைல, சிட்டி ஒரு புது விஷயம் சொன்னார். நூத்தி பதிமூணு வருஷத்திற்கு முன்னால அம்மானைப்பாட்டிலேயே சேஷய்யங்கார்னு ஒருத்தர் நாவல் எழுதியிருக்காறாம். சொல்லப்போனா தமிழுக்கே அதுதான் முதல் நாவலாம்.
ப்ரதாப முதலியார் சரித்திரம் தானே தமிழுக்கு முதல் நாவல்னு கேள்வி.
நாமெல்லாம் அப்படித்தான் நெனச்சுண்டு இருக்கோம். அது தப்புங்கிறா. ப்ரதாப முதலியார் சரித்திரம் வந்தது 1879ல. இந்த ஆதியூர் அவதானி சரிதம் அதுக்கு நாலு வருஷம் முன்னாடியே வந்துடுத்தாம். லண்டன் லைப்ரரில தேடிப்பிடிச்சிருக்கா. அற்புதமா, பழகு தமிழ்ல இருக்காம். இன்னிக்கு நடக்கிற கதை மாதிரி இருக்கு.
போச்சு. இன்னிக்கு சிவராத்ரிதான்.
கேளேன். இது ஒரு சுவாரஸ்யமான கதை. அந்தக்காலத்திலே மாப்பிள்ளைதான் பொண்ணுக்கு வரதட்சணை கொடுக்கணுமாம். அவதானி கல்யாணம் பண்ணிக்கிறான். ஆனா..
அவதானி வரதட்சணை கொடுக்காததாலே அவனை தள்ளி வச்சுடுராளா.
உனக்கு இந்த கதை ஏற்கனவே தெரியுமா? தேசிகன் முகத்தில் அளவில்லா வியப்பு.
பார்வதி சிரித்தாள். காலங்காலமா இதே கதைதானே. புதுசா என்ன. கலப்புத்திருமணம் உண்டோ?
தேசிகன், “உனக்கு இந்த கதை தெரியும். எங்கே படிச்சே. சொல்லு. சொல்லு”
உங்க கதையையே நான் படிக்கிறது கிடையாது. இதுல நூத்திச் சொச்சம் பழசான கதையை நான் எங்கேர்ந்து படிக்கிறது. ஒரு அனுமானம் தான்.
பரவாயில்லேயே. உன்னோட ஊகம் சரிதான். அவதானி, மருத்துவம் படிச்சு, பெரிய ஸர்ஜனாயிடறான். ஒரு ப்ராமணன் கத்தி புடிச்சு, பொணத்த அறுக்கறதான்னு அவனை ஜாதிப்ப்ரஷ்டம் பண்ணிடறா. இந்த  நேரத்தில அவதானி தேவதத்தான்னு ஒரு பொண்ணை சந்திக்கிறான். அவளோ ஒரு விதவை. இரண்டு பேருக்கும் நட்பு மலர்ந்து, காதலா கனியறது. கல்யாணம் பண்ணிக்கொள்ள முதல்ல அவதானியோட அம்மா சம்மதிக்கல்ல. ஆனா இரண்டு பேரும் பிடிவாதமா இருக்கிறத பார்த்துட்டு, நெய்வேலில சேஷய்யங்க்கார் வீட்ல கூட இந்த மாதிரி விதவா விவாஹம் நடந்திருக்குன்னு, அதனால இது ஒண்ணும் குத்தமில்லன்னு அவதானியோட கல்யாணத்த நடத்தி வைக்கிறா.
தூங்கிட்டியா பார்வதி
இல்லீங்க. ஆச்சர்யமா இருக்கே. நூறு வருஷத்திற்கு முன்னாடியே விதவா விவாஹத்தையும், கலப்பு திருமணத்தையும் ஆதரிச்சு எழுதியிருக்காளா. இன்னிக்கு நடந்த கதை மாதிரி இருக்கே.
ஆமாம் பார்வதி. எனக்கும் முதல்ல ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் யோசிச்சு பார்த்ததில, இன்னொரு உண்மை புரிஞ்சது. நூத்துச்சொச்சம் வருஷமா, கலப்பு மணம் தப்பில்ல, விதவா விவாஹம் தப்பில்லன்னு இந்தியாவில இருக்கிற எல்லா பாஷையிலும், கதை, நாவல், கவிதை, கட்டுரைன்னு மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்கா, எழுதிண்டும் இருக்கோம். ஆனா என்ன ப்ரயோஜனம். ஜாதித் த்வேஷம் ஒழிஞ்சதோ, முன்னைக்கிப்போ ஜாதி பெருக்கிக் கிடக்கு. சமுதாயம் மாறவே இல்லே பார்வதி. நம்ம மனசுல ஆழப்பதிஞ்சிருக்கிற பழமைப்பாசிகள், மத, இன த்வேஷங்கள் இதெல்லாம் மாறவே இல்ல. இது புரியாம, நான் என்னவோ சமூகத்தை திருத்தப் போறேன்னு வாய்ச்சவடால் விட்டுண்டு, சுப்பு மாதிரி ஜனரஞ்சகமா எழுதறவாளோட சண்டை போட்டுண்டு, பகல் கனவு கண்டுண்டிருக்கேன். எல்லாம் வியர்த்தம்.
பார்வதி திகைத்துப் போனாள். என்னென்னவோ பேச நினைத்தாலும் நாக்கு எழவில்லை. தேசிகன் தொடர்ந்தார்.
சமுதாயம் மாறும்கிற கானல் நீரை நோக்கித்தான் எங்களைப்போல எழுதறவாளோட பயணம். நூறு வருஷமா திருந்தாத சமூகத்தை நாங்களா திருத்தப் போறோம். அப்படி ஒரு குறிக்கோள் இல்லாத எழுத்து வீண். அதனால நான் இனிமே எழுதறதுல்லேன்னு முடிவு பண்ணிட்டேன். எழுதறது, படிக்கிறது எல்லாம் வியர்த்தம். பார்வதி, பார்வதி..

ம்..ம்.. நான் தூங்கல்ல. எதுங்க வியர்த்தம். நல்ல விஷயங்களைச் சிந்தனை பண்றது, அதை எழுத்துல கொண்டு வர்றது, சமூகம் தன்னை உயர்த்திக்கணும்னு ஆசைப் படறது இதெல்லாம் வீண் வேலைன்னு யார் சொன்னா. லோகத்தில பாபமெல்லாம் ஒழிஞ்சாத்தான்  நான் இனிமே உதயமாவேன்னு சூரியனும், கெட்டவனும் தானே என்னை சுவாசிச்சுதானே உயிர் வாழ்ந்துண்டு இருக்கான்னு காத்தும் யோசிச்சு, அதோட இயக்கத்தை நிறுத்திட்டா, உலகம் என்ன ஆகும். பஞ்ச பூதங்கள் யாருக்காகவேனும் தன்னோட கடமைய நிறுத்தி வைக்கிறதோ. இதெல்லாம் நியதிகள். அதது அந்த்ந்த சக்கரத்தில சுழல்ற வரைக்கும்தான் தான் நம்ம வாழ்க்கை. தாறுமாறாயிட்டா ப்ரளயம் தான். இத்தனை பேர் எழுத்தாலயும், பேச்சாலயும் பிரச்சாரம் பண்ணாட்டா சமூகம் இன்னும் மோசமா இருந்திருக்கலாம். யார் கண்டது. வெயிலுக்குப்போகாத வரைக்கும், நிழல்ல நிக்கற சுகம் தெரியாதில்லையா.
நூறு வருஷத்தில வராத சீர்திருத்தம் இனிமே வந்துடுங்கறயா.
இதுக்கெல்லாம் கால நிர்ணயம் பண்ண முடியாதுங்க. ஒரு ராஜாராம் மோகன்ராய் போராடற வரைக்கும் சதி ஒழியல்லயே
ஆனா, இப்பக்கூட சதி தலை தூக்கித்தே.
ஆமா. தூக்கித்துதான். ஆனா சமூகம் வெகுண்டு எழுந்ததே. சொல்லப்போனா சதி வழக்கம் இந்தியாவுல இருந்த ஒண்ணுதான். ராஜாராம் மோகன்ராய் போராடி, அது தப்புன்னு சட்டம் வந்ததும் ஊர் ஒத்துண்டுதே. அபூர்வமா, இப்போ அந்த வழக்கம் தலை தூக்கினதும், நாடே கொதிச்சு அத கண்டிச்சுதே. அது மாதிரி இன்னும் கொஞ்ச நாள்ல, கலப்பு மணமும், விதவா விவாஹமும் சாதாரண விஷயங்களாகலாம். அதுவரைக்கும் எழுதறவன், பிரசங்கம் பண்றவன் எல்லோரும், இந்த வழக்கங்களை வேற வேற கோணத்தில பார்த்து, எழுதி, மக்களுக்குப் புரிய வைக்கிறது அவசியம். அதுதான் எழுத்து தர்மம். இத்தனை நாளா நடக்கல்லயே, நான் எழுதறதும் பேசறதும் வியர்த்தம்னு விலகிப்போறது கோழைத்தனம். மன்னிச்சுக்கோங்கோ. வரம்பு மீறிப்பேசறேனா.
இல்லவே இல்லை பார்வதி. எவ்ளோ தெளிவா பேசறே. நீ இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதேயில்ல. எப்படி அன்னிக்கு க்ருஷ்ணன், அர்ஜுனனோட மனசு சஞ்சலத்தைப் போக்கினானோ, அதுமாதிரி, என்னோட குழப்பத்திற்கு தீர்வு சொல்லியிருக்கே. என்னோட சின்ன முயற்சிகளும், படைப்புகளும் வியர்த்தமில்லே, அதுக்கும் ஒரு குறிக்கோள் இருக்குன்னு நெனைக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது நிஜம்தானே பார்வதி,
சாமி சத்தியமா நிஜம். வாங்க போய்த்தூங்கலாம்



Sunday 2 June 2013

தமிழ் வளர்ப்பு


கதைக்கு, நடை
பிடிபடவில்லை
கவிதைக்குச் சந்தம்
கைவரவில்லை!
பேசாமல்,
தமிழ்மணம் படித்துவிட்டு,
ஈமெயில் பார்த்துவிட்டு,
ஐபிஎல் பார்த்தால்
இன்றைய பொழுது கழிந்தது.

எல்லோரும் அதைத்தானே செய்கிறார்கள்.