Thursday 13 September 2007

காஃபி சிறுகதை


காஃபி குடிக்கும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று நினைவில்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளாக ரங்கா காஃபி குடித்து வருகிறான். சின்ன வயதில் பள்ளிக்கூட தேர்வுகள் சமயம் இரவு நேரம் தூக்கம் வராமல் படிக்க அவன் அம்மா அல்லது பாட்டி காஃபி பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேணும். அது தொட்டில் பழக்கம் ஆயிற்றே.இப்போது பரிக்ஷை எதுவும் எழுதாவிட்டாலும் காபி மட்டும் குடித்து வருகிறான்.

"ஸ்டார்பக்"கில் உட்கார்ந்து கொண்டு நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கும் துபாய் போக்குவரத்து நெரிசலைப் பார்தத படி கோப்பையை உறிஞ்சின ரங்கா பெருமூச்சு விட்டான். ஆயிற்று இன்னும் ஒரு நாள். விசா கூட ரத்து செய்தாயிற்று. டிக்கெட் வாங்கியாயிற்று. நாளை மறுனாள் சென்னை. மறுநாளே பட்டுக்கோட்டை கிளம்ப வேண்டும். இந்த ஸ்டார்பக் எந்த மூலை, இதைவிட பெரிய காஃபி செயினை உருவாக்கி உலகம் பூரா இந்திய காபியை பிரபலப்படுத்துகிறேன்.

அப்போது தான் ரங்காவுக்கு தான் ஆரம்பிக்கப்போகும் காஃபி செயினுக்கு இன்னமும் பேர் வைக்காதது நினைவு வந்தது. அது பற்றி யோசிக்க இப்போது நேரமில்லை. நாலு மணி நேர விமான பயணத்தின் போது மூளையைக் கசக்கலாம், இன்னொரு கோப்பை காபி குடித்த படி.

ரங்கா, "ஆர் யூ ஸ்யூர் யு வாண்ட் டு லீவ் துபாய்?" டேவிட் திரும்பவும் கேட்டார். ரங்கவின் மேனேஜர். ரங்கா போன்ற ஒரு நல்ல தொழிலாளியை இழக்க விரும்பவில்லை போலும்.

கண்டிப்பாக டேவிட். பெயர் சொல்லி அழைக்க தயக்கமாக இருந்தது. ஆனால் சார் என்று அழைப்பதையோ மிஸ்டர் போட்டு சொல்வதையோ விரும்பாதவர். வேலையில் இருக்கிற கண்டிப்பு மாதிரி கனிவும் இருக்கும்.

ஆயிற்று வந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் ஊருக்கு ஒரு முறை கூட போகவில்லை. வந்ததே தலைக்கு மேலிருந்த கடன்கள்களுக்காகத்தான். நடுவே ஊருக்கு போய் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்த பணம். அதுவும் கரைந்து போகவா?

வந்த இடத்தில் நன்றாக வேலை செய்து நல்ல பேர் எடுத்தாயிற்று. அதனால் தான் இன்று டேவிட் தானே ஸ்டார்பக்கில் சின்ன பிரிவுபசார விழா வைத்திருந்தார். வந்த மற்ற நண்பர்கள் போய் விட்டார்கள். டேவிட் வீட்டில் இல்லை அறையில் விட்டுவிடுவதாக சொல்லியதால் ரங்கா மாத்திரம் டேவிட்டின் சிகரெட் முடிவதற்க்காக காத்திருந்தான். போய் மற்ற ஷாப்பிங் முடிக்க வேண்டும். உஷாவுக்கு என்ன வாங்கிக்கொண்டு போகலாம்.

உஷாவை நினைத்ததும் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு ஓடிற்று. எத்தனை நாட்கள் ஆயிற்று. கடிதம் எழுதவும் தயக்கம்.என்னதான் செல் போன் யுகமானாலும் சாம்ப மூர்த்தி வெகு சாதாரண மனிதர். இன்னும் செல் போன் வைத்துக்கொள்கிற அளவுக்கு வந்திருக்க மாட்டார் என்று நம்பினான். இதெல்லாம் செல் போனில் சொல்கிற சமாசாரமா என்ன!

வாட் ஹாப்பண்ட் ரங்கா? யு ஆர் ஸோ தாட்ஃபுல் டுடே? டேவிட் திரும்பவும் மௌனத்தைக் கலைத்தார்.

நத்திங். ஐ'ம் பிட் எமோஷனல் தட்ஸ் ஆல். ஐ ம் ஓகே.

லெட்ஸ் கோ.

துபாய். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம்.பிரம்மாண்டமான அடுக்கு மாடிக்கட்டிடங்களும், ஷாப்பிங் மால்களுமாக எங்கே பார்த்தாலும் க்ரேன் மற்ற ராட்சச இயந்திரங்கள். சாலை முழுக்க விரிவாக்கப் பணிகள். தவிர இப்போது மெட்ரோ வேறு. ஊர் பூராவும் திருமலை நாயக்கர் மஹால் தூண்கள் போல ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஜானவாஸ ஊர்வலம் போல் டேவிடின் கார் நகர்ந்தது. ஜான வாஸம். உஷா எப்படி இருப்பாள்? தன்னுடைய புதுத்தொழில் திட்டத்திற்கு அவளுடைய வரவேற்பு எப்படியிருக்கும். காலம் காலமாக இந்த காப்பிக்கடையோடு மாரடித்தது போதாது என்று திரும்பவும் உன்னோடு வாழ வந்தாலும் இதே கடைதானா என்று அங்கலாய்க்கக் கூடும். எந்த தொழில் செய்தால் என்ன. அதில் நமது திறமையைக்காட்டி முன்னேறுவதுதானே சாமர்த்தியம். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சியட்டில் நகரில் ஆரம்பித்த "ஸ்டார்பக்" காபிக்கடை இன்று உலகம் பூராவும் வியாபித்திருக்கிறது என்றால் சாம்ப மூர்த்தியின் திண்ணையோர காப்பிக்கடை உலகப் பிரசித்தி ஆகக்கூடாதா என்ன.

பட்டுக்கோட்டை.

ரங்காவுக்கு ஊர் நினைவு வந்தது. தபால் அலுவலகத்திலிருந்து மணிக்கூண்டை இணைக்கும் கடைத்தெருவில் சாம்பமூர்த்தியின் காஃபிக்கடை இருந்தது. இரவு பகல் ஜே ஜே என்று இருக்கும் சாலை. கொழும்பு ஸ்டோர்ஸ், பூம்புகார் சில்க்ஸ் போன்ற பெரிய துணிக்கடைகளைத் தவிர நாலைந்து சைவ உணவகங்கள், ஸ்டேஷனரி, மருத்துவ மனைகள், பாத்திரக்கடை என்று அந்தத் தெருவில் இல்லாத கடையே கிடையாது என்று சொல்லலாம். மதுரம் பல் மருத்துவமனை தாண்டியதும் " ஐயர் காபிக்கடை". சாம்ப மூர்த்தி கடைக்கு தனியே போர்டு வைக்கவில்லை. ஏண்டா, காஃபி வாசனை எட்டூருக்கு வரல்ல. அது போதாதா என்ன. என் வாடிக்கையாளர்கள் வருவார்கள் அது போதும்.

முதலில் ஒரு நல்ல பெயர் தேர்ந்தெடுத்து விளம்பரப் படுத்த வேண்டும். ரங்கா தனக்குள் சொல்லிக்கொண்டான்.

டிட்யூ கோ டு ஜி டெக்ஸ் டேவிட் மௌனத்தைக் கலைத்தார்.

இல்லை சார். அங்கெல்லாம் போய் பணத்தை செலவழிக்க விருப்பமில்லை. போனால் மனம் சபலப்படும். அதனால் போகவேயில்லை.

யு ஆர் ரைட்.. இந்த வயதிற்கு ரங்காவின் மன முதிர்ச்சி டேவிடை வியக்க வைத்திருக்க வேண்டும்.கண்ணுக்கெட்டின தூரம் வரை தெரிந்த கார் வெள்ளத்தை எப்போது கடப்போம் என்கிற எண்ணங்களில் மூழ்கிப்போனார்.

சாம்ப மூர்த்தியின் காபி கடை நல்ல பிரபலம். அந்த கடையின் காபி மணம் வேறெங்கும் கிடையாது என்று நம்பினவர்கள் ஏராளம். காபி கடை என்றால் காபி மட்டும் தான். அட ஒரு மாற்றுக்காக டீ கூடவா வைத்துக்கொள்ள மாட்டார்.அதுவும் மற்ற உணவகங்கள் மாதிரி காலை ஏழு மணிக்கு கடை திறந்தால் ராத்திரி ஒன்பது மணி வரை என்ற நேர காலமும் கிடையாது. காலை பால்காரன் ஐந்து மணிக்கு வந்துவிட்டுப் போனதும் கிடுகிடுவென்று வீட்டுக்குள்ளிருந்து திரி ஸ்டவ், பெரிய அண்டா, பித்தளை காபி ஃபில்டர், டபரா டம்பளர் செட் எல்லாம் வாசல் திண்ணைக்கு வரும். வாண்டுகள் மடக்கு நாற்காலிகளை கொண்டு வந்து போடுவார்கள். ஐந்தரை மணிக்கு கம கம வென்று காபி ரெடி.

பொதுவாக அதிகாலை வேளைகளில் வாக்கிங் போகும் முன்சீப் கோர்ட் ஜட்ஜ், டாக்டர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று ஆறு மணிக்கே கடை களை கட்டிவிடும். காலை பத்து மணி வரை ஐயர் பம்பரமாய்ச் சுழல்வார்.பிறகு மூணரை மணிக்கு ஆரம்பித்தால் ஆறரை அதிகம் போனால் ஏழு.. அத்தோடு சரி. பாத்திரங்கள் உள்ளே படையெடுக்கும். சாம்பமூர்த்தி குளித்து விட்டு சாப்பிடப் போய் விடுவார்.

அவரது காபியின் மணத்திற்கும் கடையின் கூட்டத்திற்கும் பல காரணங்கள் சொன்னார்கள். ஐயரின் கடைக்கு இரண்டு கடை தள்ளி ஜானகிராம் காஃபி ஹவுஸ் இருந்தது. இதுவும் காபி கடைதான். ஆனால் காபிப்பொடி விற்கிற கடை.. ஓயாமல் காப்பிக்கொட்டை அரைக்கிற மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்கும். இங்கும் நல்ல கூட்டம் இருக்கும். காப்பிப்பொடி தவிர ஊத்துக்குளி வெண்ணை, ஆவின் நெய்.

சதா காப்பிப்பொடி அரைப்பதால் ஜானகிராம் காஃபி ஹவுஸ் கடையைச்சுற்றி எப்போதும் காபியின் மணம் சூழ்ந்திருக்கும். ஐயரின் காபிக்கடை பிரபலமானதற்கு இதுவே காரணம் என்று சொன்னார்கள். மூக்கின் மணமே நாக்கின் சுவையாகத் தோணுகிறது என்றார்கள். இது உண்மையா என்று பார்க்க அடுத்த முறை பாதாம் கீர் குடிக்கும் போது மூக்கைப்பிடித்துக்க்கொண்டு குடித்துப்பார் அப்போது தெரியும் என்று வாதிட்டார்கள். ஐயரின் கடைக்கென்றே ஒரு வாலிபர் கூட்டமும் உண்டு. கடையின் பிரபலத்திற்கு அவர்களின் அனுமானம் வேறானதாக இருந்தது. கடையில் கும்பல் அதிகமாக இருக்கும் வேளைகளில் உஷாவும் அவள் தங்கை கீதாவும் அப்பாவுக்கு ஒத்தாசை செய்வதுண்டு. இவர்களின் கண்பார்வை தங்கள் மீது என்று படும் என்ற ஏக்கத்திலேயே தவம் கிடக்கிறார்கள். அதுவே கூட்டத்திற்கு காரணம் என்றும் பேச்சு.

ஐயரின் காதுக்கும் இது போன்ற விஷயங்கள் வரும். போக்கத்த பயல்கள் என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுவார். அவர் என்ன காபிப்பொடி வாங்குகிறார். அந்த மணத்தின் ரகசியம் என்ன என்று ரங்காவும் அடிக்கடி கேட்டுப்ப்பார்த்திருக்கிறான். கை மணம் தாண்டா ரங்கா.. தொழிலில் நேர்மை வேணும். பேராசைப்படக்கூடாது. இது மட்டும் இருந்தா கடவுள் பார்த்துப்பான். நமக்கென்ன கவலை.. என்று சொல்வாரே தவிர வெளிப்படையாகச் சொன்னதில்லை.

இருக்கட்டும். இனிமேல் சொல்லித்தான் ஆக வேண்டும். ரங்காவும் பார்ட்னர் ஆகி விட்டால் மறைக்க வேண்டியதில்லை அல்லவா! அத்தோடு இன்னொன்றும் கேட்க வேண்டும். உஷாவை..

வாட் ஆர் யுவர் ஃப்யூச்சர் ப்ளான்ஸ் ரங்கா?

உஷாவை மணந்துகொள்வது.. வாய் வரை வந்து விட்டது. ஐ'ம் கோயிங் டு ஸ்டார்ட் மை ஓன் பிஸினஸ். காஃபி செயின் என்பதை சொல்லவில்லை.

டேவிட் ஆச்சர்யமாகப் பார்த்தார். இந்த சின்ன வயதில் இத்தனை தீர்க்கமான முடிவா என்று நினைத்தது அந்த பார்வையில் தெரிந்தது.

குட் லக்.. பட், இஃப் யு ஃபீல் லைக் கமிங் டு துபாய், யு கேன் கால் மி எனி டைம்.

ரங்காவுக்கு கண் பனித்தது. முன் பின் தெரியாதவர். இங்கிலாந்து தேசத்தவர். இத்தனை கரிசனமா! ரங்கா யு ஆர் லக்கி என்று மனம் எக்காளமிட்டது.

தேங்க்யூ ஸார்.. தேங்க்யூ சோ மச்.. பட் விஷ் மி தட் ஐ வில் பி ஸக்ஸஸ்புல் இன் மை அட்வென்சர்.. மேலே பேச முடியவில்லை.

காஃபி செயின் ஆரம்பிப்பது பற்றின யோசனை இரண்டு வருடத்திய கனவு. "வீக் எண்ட்" MBA படித்த போது எப்படி பிஸினஸ் ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு ப்ராஜக்ட் செய்ய வேண்டியிருந்தது. அப்போது பொறி தட்டிய் யோசனை. ஸ்டார்பக்ஸ் மற்றும் ஸெகண்ட் கப் என்ற இரு நிறுவனங்களின் வெற்றியை ஆராய்ந்து நுணுக்கமான விவரங்களுடன் பவர் பாயிண்ட்டில் சமர்ப்பித்த போது ப்ரொபஸர் பாராட்டிய போது எழுந்த உத்வேகம். நாமும் சாதிக்கலாம். தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் வேர் விட்டது. அது மட்டும் தானா? உஷா இல்லையா..

ஊரில் எல்லோருக்கும் நேரில் போய்த்தான் சொல்ல வேண்டும். வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குகிறேன் என்றால் அதற்கு வரவேற்பு கிடைப்பது கடினம்தான். வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கை இருக்கிறது. ஊருக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறானே தவிர மற்ற திட்டங்களைச் சொல்லவில்லை. முதலில் உஷாவிடம் சொல்ல வேண்டும்..

ஆமை வேகத்தில் நகர்ந்து ஒரு வழியாக டேவிடின் கார் சத்வா ரவுண்ட் எபவுட் வந்து சேர்ந்தது. ரங்கா இறங்கிக் கொண்டான். இங்கிருந்து நடந்து போவது எளிதாகயிருக்கும்.

குட் நைட் டேவிட்.. தாங்க்ஸ் ஃபார் தி ரைடு.

குட் நைட் ஐ வில் ஸி யூ டுமாரோ.. பிஃபோர் யுவர் ஃப்ளைட்

மூன்று வருடங்கள். கிட்டத்தட்ட ஒரு தவம் போல். வந்த புதிதில் தனிமையும் ஊர் நினைவுகளும் வாட்டின. வந்ததே ஊரில் அக்கா ரமா கல்யாணத்திற்கு வாங்கின கடன்கள் சீக்கிரம் அடைய வேண்டும் என்றுதானே. குருவி சேர்ப்பது போல் சேர்த்து, சேமித்து.. அப்பப்பா.. முதல் ஒரு வருடம் எத்தனை சவால்கள்..

ஓரளவிற்கு கடன்கள் அடைந்ததும் மேலே படிக்க ஆரம்பித்தான். பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருமானத்தை வளர்த்துஅதையும் பாதுகாப்பாக தொழில் தொடங்க வசதியாக வங்கியில் வைத்திருக்கிறான். சிறிய அளவில் தொடங்கி மெதுவாக விரித்து முன்னேற்ற வேண்டும் என்று திட்டம்.

MBA படித்ததால் மட்டுமே அவனுக்கு தனியே தொழில் தொடங்கும் ஆசை வந்ததென்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். ரங்காவுக்கு அதில் பத்து சதவீதம் தான் உடன்பாடு. பின்னே எல்லாரிடமும் உஷாதான் முக்கிய காரணம் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்ன! பால்ய சினேகிதம். காலம் காலமாய் பழகின குடும்பங்கள். இரண்டு நடுத்தர வர்க்கங்கள்.ரங்காவின் அப்பாவுக்கு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் உத்யோகம். சாம்ப மூர்த்தியின் குடும்பம் காஃபிக்கடை வருமானத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

பட்டுக்கோட்டையில் அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுக்கள் வந்திராததால் உஷா,ரமா,ரங்கா எல்லோரும் பாண்டி, பல்லாங்குழி ஆடினார்கள்.ஐந்தாவது வகுப்பு வரை ஒரே பள்ளிக்கூடம். ராஜாமணி தியேட்டரில் "தசாவதாரம்" மற்றும் "சுவாமி ஐய்யப்பன்" சினிமா பார்க்க பாட்டியோடு போயிருக்கிறார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து அவள் மகளிர் மேனிலைப்பள்ளியில் தொடர ரங்காவும் தனித்து விடப்பட்டான். ஆனாலும் டைப்பிங் கற்றுக்கொள்ள இன்ஸ்டிடியூட் போகவும், துணைக்காக மணிக்கூண்டு சமீபம் இருக்கும் ஹமீதியா மெடிக்கல்ஸ்லிருந்து மருந்து வாங்கவும் ரங்காதான் ஆண் துணை.

காலச்சக்கரம் தான் எத்தனை வேகமாக சுழல்கிறது. பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்ததும் ரங்கா தஞ்சை சரபோஜிக் கல்லூரியில் வணிகம் படிக்கப்போனான். உஷா அதே வணிகத்தை கரஸ்பாண்டன்ஸில் கற்றாள். இப்போதெல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வது குறைந்துவிட்டது என்றாலும் பரஸ்பரம் அன்பு குறையவில்லை. ரங்காவின் வாலிப வயது ரொம்ப படுத்தியது. உஷா எங்கே போய்விடப்போகிறாள் என்று மனதை அடக்கி ஒரு வழியாக இளநிலைப் பட்டதாரியாகி வேலை தேடும் படலம் தொடங்கிற்று. மருத்துவம் பொறியியல் படித்தவர்களுக்கே வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம். வெறும் பி.காம் படிப்பு எந்த மூலை!

வேலை தேடும் மும்முரத்தில் கொஞ்ச நாட்களுக்கு உஷா மறந்து போனாள். அப்போது ஏன் தனக்கு சாம்பமூர்த்தியின் காஃபிக்கடையை எடுத்து அதை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று ரங்காவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. யார்தான் அதை ஒத்துக்கொண்டிருப்பார்கள். இப்போதும் ரங்காவுக்கு அம்மா அப்பா முழுமனதுடன் ஒத்துக்கொள்வார்களோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. பேச வேண்டும். பேசி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வரவழைக்கவேண்டும். பேச்சைவிட செயலில் வெற்றி பெற்றுக்காட்ட வேண்டும். MBA படிப்பு தன்னை வெகுவாக மாற்றி விட்டதை உணர்ந்தான். முக்கியமாக தன்னம்பிக்கயைக் கொடுத்திருக்கிறது.

சூரியன் முற்றிலுமாக மறைந்து விட்டது. மின்சார வெளிச்சத்தில் தூரத்து அடுக்குமாடிக் கட்டிட்ங்கள் ஜொலித்தன. பகலைவிட இரவு நேரத்தில் துபாய் இன்னமும் ப்ரகாசமாக இருந்தது. இரவு என்று சொல்வதற்கு கிஞ்சித்தேனும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருளே இல்லை. என்ன ஒரு அதிசயம். பணம் கொழிக்கிற நகரம். ரங்காவுக்கு ஒரு நிமிடம் நாளை முதல் இந்தக் காட்சிகளைப் பார்க்கப்போவதில்லை என்ற எண்ணம் வந்து கொஞ்சம் வருத்தமாக்க் கூட இருந்தது. ஏன்.. கொஞ்ச நாளில் இதே ஊரில் என்னுடைய காபி செயின் கடை ஆரம்பிக்க வரக்கூடும். துபாய்க்கு எத்தனை கடைகள் வந்தாலும் கூட்டம் வரும். வருமானமும். தனது கனவுகளை வளர்த்து அதற்கான முதலீட்டையும் தந்த நகரம். மனதார வாழ்த்தினான்.

நிரந்தர வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்த போது தான் பள்ளிக்கூட நண்பனை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. தஸ்தகீர் ப்ரியமான நண்பன். துப்பாய் போக பள்ளிக்கூட படிப்பே போதுமென்று கல்லூரிப்பக்கம் போகாமல் கிளம்பிப் போனவன். தட்டுத் தடுமாறி பல இடங்களில் சின்னச் சின்ன வேலைகள் பார்த்து தற்சமயம் துபாயில் நிரந்தர வேலையில் இருப்பதாச் சொன்னான். ரங்காவுக்கு விஸிட் விஸா வாங்கித் தரமுடியுமென்றும் அங்கே வந்தால் வேலை கிடைத்துவிடுமென்றும் அப்பாவிடம் சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னான். கண்காணாத ஊருக்கு அனுப்ப அப்பா, அம்மா பாட்டி யாருக்குமே முதலில் விருப்பம் இல்லை. ஆனால் ரமாவின் கல்யாண்த்திற்கு வாங்கின கடன் பாக்கிகளும், இன்னும் ஒரு வருடத்தில் தான் ஓய்வு பெறப்போகிறோம் என்கிற நிதர்சனமும் அப்பாவை வெகு சீக்கிரம் மனம் மாற்றியது. தவிர தஸ்தகீரும் அதே ஊரில் தானே இருக்கிறான்.

தெரிந்தவர்களிடத்தில் நேரில் சொல்லிக்கொள்ளப்போய் தூக்க முடியாமல் அறிவுரைகளை தூக்கிக்கொண்டு வந்தான். சாம்ப மூர்த்தி மாமா அறிவுரைகளோடு ஒரு கப் காப்பியும் கொடுத்தார். உஷாவிடம் தனியாகப் பேச முடியவில்லை. கீதா வால் மாதிரி அக்காவோடு ஒட்டிக்கொண்டிருக்க..

நான் துபாய் போய்ட்டு வரேன் உஷா.

எப்போ வருவே

இது எதிர்பாராதது. சீக்கிரம் வருவேன். "எனக்காக காத்திரு" மனதில் சொல்லிக்கொண்டான்.

உஷாவும் ஏதோ சொல்ல நினைத்தாள் போலிருக்கிறது..அப்பா வாசலிலிருந்து கூப்பிட இதோ வரேன்பா என்ற படி போகிற போக்கில் "பை" சொன்னாள்.

அவள் என்ன சொல்ல நினைத்திருப்பாள்.தனக்கே அவளிடம் இருக்கும் அன்பைச் சொல்ல தைர்யம் வராத போது உஷாவுக்கும் வெட்கமும் தயக்கமும் இருந்திருக்கலாம்.. ஒருநாள் கேட்க வேண்டும்..

நேற்றைக்கு நடந்ததுபோல் இருக்கிறது. தஸ்தகீருக்கும் ரங்கா ஊருக்குப்போவதில் விருப்பமில்லை. இன்னும் கொஞ்ச நாள் இருடா என்று சொல்லிப்பார்த்தான். ரங்காவின் கனவுகள், சாதிக்க வேண்டுமென்ற உத்வேகம் அவனுக்குப்புரியவில்லை. அவனும் MBA படித்திருந்தால் புரிந்து கொள்வான் என்று சொல்லிக்கொண்டான்.மெலிதாக முறுவலித்தான்.

அறைக்கதவைத் திறந்துகொண்டு நுழைந்ததும், பாலகிருஷ்ணன் முன்னமே வந்துவிட்டதைக் கவனித்தான். சக தொழிலாளி தான். ஆனால் ஹெட் ஆஃபீஸில் இருக்கிறான். ரங்காவுக்கு ஸைட்டில் வேலை.

என்னடா பலமான பார்ட்டியா.. மச்சம்டா..

பதிலேதும் சொல்லாமல் உடை மாற்றிக்கொள்கிற போதுதான் கவனித்தான். நாளை ஊருக்குக் கிளம்புகிறோம் இன்று எனக்கு கடிதம். யாரிடமிருந்து வந்திருக்கும். அட அம்மாதான். ஆச்சர்யமாக இருந்தது. ரங்காவின் கம்பெனி மிகப்பெரியது. சில சமயம் கடிதங்கள் தவறுதலாக மற்ற ஸைட்டுகளுக்குப் போய்விட்டு கடைசியாக மெயின் ஆஃபீஸ் போயிருக்கும். பாலகிருஷ்ணன் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நாளை மறுநாள் அம்மாவைப்பார்க்கப் போகிறோம். நேரில் பேசிக்கொள்ளலாம். இந்தக்கடிதமும் வந்து நாளாகியிருக்கும். என்ன புதிதாக விஷயம் இருக்கப்போகிறதென்ற அசுவாரசியத்துடன் பிரித்தான். அனேக ஆசிர்வாதங்களைத் தொடர்ந்து வழக்கமான விசாரிப்புகள்.. இவைகளைக் கடந்து..

" நீ சீக்கிரத்தில் ஊருக்கு வருவதில் சாம்பு மாமாவுக்கும் சந்தோஷம் (இருக்காதா பின்னே). எப்போ வருவதாக ப்ளான்? உஷாவுக்கு நல்ல வரன் அமைந்திருப்பதால் சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணி விடலாமென்று பார்க்கிறார். பையனுக்கு சேரங்குளம். அவாளுக்கும் ஹோட்டல் இருக்காம். காபிக்கடையை மாற்றியமைத்து சின்னதாக ஹோட்டல் வைக்கலாமென்று மாப்பிள்ளைப் பையன் சொன்னானாம். சாம்ப மூர்த்திக்கும் வயதாகி விட்டதால் சரியென்று சொல்லிவிட்டதாகச் சொன்னார்...."

"ஓ நோ.."

ரங்காவின் அலறல் பாலகிருஷ்ணனை உலுப்பிற்று. பயந்து போனான்.

என்னடா! ஊரில் எல்லாரும் நலம்தானே.. என்று எழுந்து வந்தான்.

கண்ணீரும் கம்பலையுமாக ரங்காவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு நிமிஷத்தில் பாலகிருஷ்ணனுக்கு புரிந்து போயிற்று இது காதல் சமாசாரமென்று..

ரங்காவின் கனவுக் கோட்டைகள் நிமிஷத்தில் இடிந்து போயிற்று. வாய் விட்டு சின்னக்குழந்தை மாதிரி அழுதான். தன்னுடைய தொழில் தொடங்கும் முயற்சி தோல்வியுற்றது ஒரு புறம். உஷாவை இழந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

*****
ரங்கா இப்போதெல்லாம் காஃபி குடிப்பதில்லை. அந்த வார்த்தையைக் கேட்டாலே அழுகை வந்து விடுகிறது. காசிக்குப் போகிறவர்கள்தான் தங்களுக்குப் பிடித்ததை விட்டுவிட்டு வருவார்கள். ரங்கா காசிக்குப் போகாமலேயே காபியை விட்டுவிட்டான்.

தனிமையை விரும்பும் ரங்காவைத் தொந்திரவு செய்ய வேண்டாம்.அவன் அழட்டும் விடுங்கள்..

Tuesday 4 September 2007

சிறுகதைப் பக்கம்

அன்பர்களே வணக்கம். வெகுநாட்களுக்கு முன்பு நான் சிறுகதைகள் எழுதினேன்.அதெல்லாம் பழங்கதை என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. பழைய கதைகளை தருவதோடு புது முயற்சிகளும் செய்வேன். முன்னெச்சரிக்கை.

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அன்புடன் தமிழ்நேசன்

Sunday 2 September 2007

enadhu sirukathaikaL

vanakkam.

enadhu sirukathaikaLai ingE padikkalaam.