Tuesday 13 October 2015

நவராத்ரி பதிவு 1 (மீள் பதிவு)

இது ஒரு மீள் பதிவு (13 அக்டோபர் 2015)

இரண்டு வருடங்கள் முன்பு எழுதியது. தற்சமயம் இங்கே கொலு கிடையாது. வீட்டம்மா தாயகத்தில் சில மாதங்களாக இருப்பதால், நான் மட்டும் தனிக்கட்டை. முக நூலிலும், வாட்ஸ் அப்பிலும், வகை வகையான கொலுவை பார்த்தபோது, மனது பழைய நினைவுகளில் மூழ்கிப்போனது.

சொல்லப்போனால், 2013 க்குப் பிறகு, போன வருடமும் விமர்சையாக கொலு வைக்க முடியாமல் போனது தனிக்கதை. 
இரண்டு வருடங்களில் வாழ்க்கை எவ்வளவு மாறிப்போய் விட்டது.

பொதுவாக, நிறைய நண்பர்களைச் சந்திப்பதே கொலு சமயத்தில்தான். இப்போது அதுவும் கிடைக்காது.

எத்தனையோ மாற்றங்களிலும், மாறாதது பாம்பே ஜெயஸ்ரீயின் அமிர்தவர்ஷினியான சங்கீதம் மட்டும்தான். அதுதான் என்னை இன்னமும் ‘மனிதனாக’ வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. சுய புராணம் போதுமென்று நினைக்கிறேன். மேலே படியுங்கள், முக்கியமாக அழகு கொஞ்சும் பாரதியாரின் பாட்டை, ஜெயஸ்ரீயின் இனிமையான குரலில் கேளுங்கள்.

இன்று (5 அக்டோபர் 2013) நவராத்ரிப் பண்டிகை ஆரம்பிக்கிறது. இரண்டு நாளாக, பரணிலிருந்து கொலு பொம்மைகளையெல்லாம் எடுத்து, கவனமாக பிரித்து, கொலு அடுக்குவதில் வீட்டம்மா ரொம்ப பிஸி. ஸ்லாடட் ஆங்கிளை, படியாக மாற்ற வேண்டியதும், வீட்டம்மா சொல்லும் தட்டுமுட்டு வேலைகளைச் செய்வது மாத்திரம் தான் என் பொறுப்பு. தவிர, நண்பர்களின் இல்லங்களுக்கு, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள சாரத்யம் செய்து, காரில் கூப்பிட்டுக்கொண்டு போக வேண்டியது கூடுதல் பொறுப்பு. பெண்களுக்கு மாத்திரமில்லை, நாங்களும் பல நண்பர்களைச் சந்திப்பது இந்த நவராத்திரி சமயம்தான். கொலு பொம்மை படமெல்லாம் அப்புறம் போடுகிறேன். உள்ளூர் நண்பர்கள் தவறாமல் கொலுவிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது முன்னழைப்பு. முறையான அழைப்பு, வீட்டம்மாவிடமிருந்து வரும்..

பதிவெழுதி சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த நவராத்ரி சமயத்தில் எதைப்பற்றி எழுதலாமென்று நினைத்துக்கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர், கர்னாடக சங்கீதத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிகமான ஆலாபனைகள் இல்லாமல், இனிமையான குரலில், எளிய பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள், கேட்கிறேன் என்றார். மணிக்கணக்காக கச்சேரி கேட்க பொறுமையில்லை, அந்த சங்கீதம் பற்றி ஞானமுமில்லை என்றார். நானும் கிட்டத்தட்ட அதே ரகம்தான். அதாவது, சங்கீதம் தெரியாது. ஆனால், மணிக்கணக்கில் கேட்கப்பிடிக்கும். ஆலாபனை, நிரவல், ராகம் தானம் பல்லவி (சங்கராபரணம் படத்து பாட்டு இல்லை), தனி ஆவர்த்தனம் எதுவானாலும் சரி. ராகம் காபியோ, காம்போதியோ எதுவானால் என்ன! கேட்க சுகம். 

அதற்காக ஞான சூன்யம் என்று தள்ளி விடாதீர்கள். நிறைய கேட்டுக்கேட்டு, சிலபல ராகங்கள் கண்டுபிடிக்கத்தெரியும். அடாணா மட்டும் 100% சரியாக கண்டுபிடிப்பேன். இந்தப் பதிவு என் கர்னாடக அறிவைப்பற்றியதில்லை.

இந்த நவராத்ரியின் போது ஒவ்வொரு நாளும்,  ஒரு எளிய பார்தியாரின் பாடலை அறிமுகம் செய்தாலென்ன என்று தோணிற்று. இது பாரதியின் புகைப்படம்.




பாரதியின் முறுக்கின மீசைக்கும், தீர்க்கமான பார்வைக்கும் பின்னால், அன்பும், பரிவும் இருக்கிறது. காதல் ரசம் ததும்பும் அவரது கண்ணன் பாட்டும், கண்ணம்மா பாட்டுமே அதற்கு சிறந்த உதாரணம். பிரிவாற்றாமையை இவ்வளவு அழகாகப்பாட முடியுமா?

அதுவும் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கண்ணனின் காதலியின் விரக தாபத்தைக் கேளுங்கள். பாட்டைக்கேட்டுக்கொண்டே, அந்த அழகான வரிகளைப் படிக்கலாம். கீழே வசதிக்காக பாரதியின் பாட்டையும் முழுக்க கொடுத்திருக்கிறேன்.






இன்னொரு செய்தி. பாரதியின் பாடலில் உள்ள சரணங்கள் மூன்று ஜெயஸ்ரீயின் பாடலில் விடுபட்டுள்ளது. நீளம் கருதி, ஜெயஸ்ரீ அந்த வரிகளை விட்டிருக்கலாம்.  பாரதி இந்த பாட்டிற்கு அமைத்த ராகம் செஞ்சுருட்டி. ஜெயஸ்ரீயும் அதே ராகத்தில்தான் பாடியிருக்கிறாரா என்று சங்கீதம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 கண்ணன் பாட்டு

10. கண்ணன்-என் காதலன்

                                 செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சம் துடித்ததடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்டதடீ!

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குணமுறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்து சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!


எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!


பாடல் தந்த இவர்களுக்கு நன்றி

பிரிவாற்றாமையை, தூண்டில் புழுவிற்கு ஒப்பிடுகிறார். யோசித்துப்பாருங்கள். என்ன அழகான உவமை. பிறகு கூண்டுக்கிளி. வைத்தியரும், ஜோசியரும் கூட கைவிட்டு விட்டார்கள் என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

இனி, பாம்பே ஜெயஸ்ரீ பற்றி.

பாரதியின் பாடல் முன்பே படித்ததுதான். ஆனால், அந்த வரிகளின் ஆழம், மன நிலை, ஏக்கம் இதையெல்லாம் நம் கண் முன்னே நிறுத்துவது பாம்பே ஜெயஸ்ரீயின் சுகமான சங்கீதம். அந்தக்குரல், அதில் இழையும் ஸ்வரங்கள். இரண்டு மூன்று தடவை கேட்டுப்பாருங்கள். 

காணி நிலம் வேண்டும் என்று பாடின பாரதி, ”பாட்டுக்கலந்திடவே அங்கோர் பத்தினிப் பெண் வேணும்” என்று பாடினார். பாரதி மட்டும் இந்தப் பாடலைக் கேட்டிருந்தால், எவ்வளவு மகிழ்ந்திருப்பார்.

பாரதியின் எல்லா பாடல்களையும் ஜெயஸ்ரீ பாடினால் எப்படி இருக்கும். நிச்சயமாக அதற்கு கடும் உழைப்பு தேவை. ஜெயஸ்ரீ மனது வைத்தால் முடியும். 

அதுவரைக்கும் அவர் பாடின பாரதி பாடல்களை தினமுன் இங்கே கேட்டு மகிழ்வோம். இதோ பாம்பே ஜெயஸ்ரீயின் புகைப்படம்
.

அன்புடன்
வெங்கட்