Wednesday 7 August 2013

எழில் கொஞ்சும் மலை நாடு (பாகம் 3)

போன இரண்டு பகுதிகளில், ஆலப்புழாவின் படகு வீட்டையும், ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமங்களையும் பார்த்தோம். இப்போது, அருவிகளின் அழகைப் பார்ப்போம்.

சாலக்குடி அருவி என்றதும் நம் எல்லோருக்குமே முதலில் நினைவுக்கு வருவது, கே. பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் தான். படம் தொடங்குவதே அருவியின் ஆர்ப்பரிக்கும் ஓசையுடன் தான். கமலும், ரேகாவும் திரையில் அறிமுகமாகும் கணங்கள். அவர்களது பின்னணி, அருவிக்கு வந்ததன் நோக்கம் நமக்குத் தெரியும்போது நெஞ்சு பதைபதைக்கும்.

ஹோவென்ற இரைச்சலோடு கண்ணில் விரியும் சாலக்குடி அருவியை காண வேண்டுமென்பது நெடு நாள் ஆசை. முன்பொரு தரம், நண்பனின் திருமணத்திற்காக சாலக்குடி போனோம், ஆனால் நல்ல மழை. கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாகப் பயணித்தோம். பாலக்காட்டில் ஆரம்பித்த மழை, குருவாயூர், சாலக்குடி வரை விடவேயில்லை. திருமணம் முழுக்க முழுக்க மழையில்தான் நடந்தது. மழையில், அருவிப்பக்கம் போவது பாதுகாப்பானதில்லையென்று நண்பனும், அவர் குடும்பத்தார்களும் சொன்னதால், அந்த முறை அருவியைப்பார்க்கிற வாய்ப்பு தட்டிப்போயிற்று. இது நடந்தது 1991ல்.

பிறகு, இந்தியாவை விட்டு, திரைகடலோடியும் திரவியம் தேட மத்திய தரைக்கடல் நாடுகளில் வசிக்க ஆரம்பித்ததும், கேரளா பக்கம் போக வாய்ப்பு அமையவில்லை.

பின்னாளில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கும், ஸ்விட்ஸர்லாந்தின் ரைன் நீர்வீழ்ச்சிக்கும் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் சென்றபோதும், சாலக்குடி அருவிக்கும் போக வேண்டுமென்ற எண்ணம் மாறவில்லை.

போன டிஸம்பரில், கொச்சியில் போய் இறங்கினதும், முதலில் கிளம்பினது சாலக்குடிக்குத்தான்.

ஆனால், புன்னகை மன்னன் படத்தில் பார்த்த அழகும், ஆர்ப்பரிப்பும் நேரில் கண்டபோது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை, மழைக்காலம் முடிந்த உடனே போயிருந்தால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகம் இருந்திருக்கலாம்.

இன்னொரு ஏமாற்றம். தண்ணீர் அருகே போகமுடியாத குறை. நயாகரா நீர்வீழ்ச்சியில் படகிலும், நடந்தும் தண்ணீருக்கு மிக அருகே போய் ஆசை தீர நனைத்துக்கொள்ளலாம். நீர்த்திவலைகள் முகத்தில் தெறிக்க, ராட்சச இரைச்சலில், பயந்தபடி கொட்டும் அருவியின் போகிற இன்பமே அலாதி. அது சாலக்குடி மற்றும் அதிரம்பள்ளி அருவிகளில் கிடைக்கவில்லை.

மற்றபடி, பச்சைப்பசேலென்ற வனாந்தரப் பிரதேசமும், சலசலக்கும் நீர்வீழ்ச்சியும், அமைதியான பின்னணியும் காணத்தகுந்தவையே. இதோ படங்களும், காணொளியும் உங்களுக்காக.





காணொளி







கீழே உள்ள காணொளி வழச்சல் அருவி
கொச்சியிலிருந்து மூணார் போகிற வழியில் உள்ளது

என்ன நண்பர்களே, இந்தப் பதிவை ரசித்தீர்களா? உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நான் பதிவுலகத்திற்கு புதியவன். அதனால் உங்கள் எண்ணங்களும் ஆதரவும் அவசியம்.

சுற்றுலா போக எது நல்ல காலம், எவ்வளவு செலவாகும் போன்ற விபரங்களை சில அன்பர்கள் கேட்டுள்ளார்கள். இந்த தொடரின் முடிவில் இது பற்றின விபரங்கள் தரப்படும்.

அன்புடன் வெங்கட்



2 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

geeyes said...

உலகமே இறைவனுக்குச் சொந்தமாக இருப்பது உண்மையென்கிறபோது, 'God's own country’ என்று தனியாகத் தாங்கள் கூறிக்கொள்ளும் பகுதிகளுக்குச் சென்றுவந்த அனுபவங்களை எழுதியிருக்கிறாய்.
இயற்கையின் வனப்புகளை பேணிக்காக்க அவர்கள் முயல்வதை நாம் கவனிக்கவேண்டும். பரந்து கிடக்கும் நிலம் இறைவனின் உடலின் ஒரு பகுதி என்பதால் அதைச் சிறப்பாகப் பேணுவதும் இறைவழிபாட்டின் ஒரு பகுதியாகும்.
உன் பயணம் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் விவரமாக எழுதலாமே என்று தோன்றுகிறது.
படித்தவரையில் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்