Saturday 3 September 2016

வணக்கம் நண்பர்களே,

அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.

அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.

இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.

மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.

அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.



அன்புடன் வெங்கட்

No comments: